சீட்டுக்கட்டாய் சரிந்த 10,000 கட்டிடங்கள்.. மியான்மரில் இருந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மர் நாட்டை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 10 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலுமாக உருக்குலைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒரு செங்கல் கூட எடுத்து பயன்படுத்த முடியாத அளவுக்கு மண்ணோடு மண்ணாக அந்த கட்டிடங்கள் தூள்தூளாக சிதறி உள்ளதாக கூறுகின்றனர் சீன மீட்பு படையினர்.
கடந்த 28-ந் தேதி மியான்மர் நாட்டின் தலைநகர் நைபியிடவ் மற்றும் மாண்டலே நகரை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக தலைநகர் நைபிடவ்-ல் மூன்று முறை அடுத்தடுத்து இந்த நிலநடுக்கம் உண்டானது. ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 7.7 ஆகவும், குறைந்தபட்சம் 4 ஆகவும் இது பதிவானது.
இதையும் படிங்க: மியான்மருக்கான ‘ஆப்ரேஷன் பிரம்மா’ என்றால் என்ன..? இந்தியா ஏன் அந்த பெயரை தேர்வு செய்தது..?
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு முன்னால் மியான்மரின் கட்டிடங்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுக்கள் காற்றின் வேகம் தாளாமல் சரிவதைப் போல அந்த கான்கிரீட் கட்டிடங்கள் நொடிப்பொழுதில் பொலபொலவென சரிந்து விழுந்தன. அதுவும் தூள் தூளாக நொறுங்கிப் போயின. தலைநகர் நைபிடவ் மற்றும் மாண்டலே ஆகிய நகரங்களில் மட்டும் ஏறத்தாழ 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் சிக்கி 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கூட 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களைப் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் மீட்புப் பணிக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக சீனாவும், இந்தியாவும் களமிறங்கி இயல்பு வாழ்க்கைக்கு மியான்மர் மக்கள் திரும்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் போதிய கனரக வாகனங்கள் இல்லாததாலும், அதிஉயர பளுதூக்கிகள் இல்லாததாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் உள்கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் சேதமானதால், குடிநீர், கழிப்பிட வசதி, அடிப்படை மருத்துவ வசதிகள் போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுவதாக மீட்புப் பணியில் உள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்ட போதிலும் அவர்கள் விரைவில் மீண்டு வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை சொற்பம் தான் என்றாலும், சுற்றுலாப் பயணிகளின் அச்சத்தை போக்குவதற்கு தாய்லாந்து அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: ‘334 அணு குண்டுகளின் சக்தி வெளிப்படும்’: மியான்மர் பூகம்பம் குறித்து புவியியல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை..!