×
 

இந்து கோயில்களின் புனிதத்தை இப்படி கெடுக்கனுமா? - நயினார் நாகேந்திரன் காட்டம்!

கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுர அலங்காரம் செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை சார் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக பட்ஜெட்டின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை நடைபெறுகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து சட்டசபைக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் மானிய கோரிக்கையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் அமைச்சர் சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதில் கலைஞர் சமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு அதில் தமிழக அரசின் சின்னமும் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரும் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்துக்களின் மனதை சேகர்பாபு புண்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்திருக்கிறது.

இதையும் படிங்க: ஸ்டாலின் அரசியல் புரியவில்லை… நயினார் நாகேந்திரன் வெட்கப்பட வேண்டாமா?: ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!

திமுகவின் இந்த செயலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மறைந்த திரு. கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் அறிவாலயம்  அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது. 

"பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் திரு. சேகர் பாபு அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்களை கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: சீமானுக்கு டாடா... பாஜகவுக்கு தாவும் சாட்டை துரைமுருகன்? - தம்பிகள் கதறல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share