இந்தியா - பாக். இடையே அதிகரித்து வரும் பதட்டம்.. பாக். பிரதமருக்கு நவாஸ் ஷெரீப் அட்வைஸ்!!
இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார்
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 2வது முறையாக நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை.. என்ன முடிவுகள் எடுக்கப்படலாம்?
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் கடந்த சில நாட்களுக்கு முன் லாகூரில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஷெரீப்பிடம் நவாஸ் கேட்டறிந்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் முடிவு, இப்பகுதியில் போர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஷாபாஸ் நவாஸ் ஷெரீப்பிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று நவாஸ் ஷெரீப் தனது சகோதரருக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுடனான நல்லுறவை ராஜதந்திர வழிகள் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் நவாஸ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மூன்று முறை பதவி வகித்த நிலையில், தற்போது தனது சகோதரர் மூலம் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி வருகிறார் என்ற விமர்சனங்களும் உள்ளன.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தளங்கள் மூடல்..!