பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை..? அதிபர் ட்ரம்ப் திட்டம்..!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய விரைவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு அடுத்த வார இறுதிக்குள் வெள்ளை மாளிகை பிறப்பிக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் ஆகியவை காரணமாக இந்தத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகளுக்கும் சேர்த்து அதிபர் ட்ரம்ப் தடை விதிக்கலாம் எனத் தெரிகிறது.
அமெரிக்காவில் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அகதிகளாகவும், அல்லது சிறப்பு குடியேறிகள் என்ற ரீதியில் விசா பெற்றுள்ளனர். இந்தத் தடையை அதிபர் ட்ரம்ப் விதித்தால் இவர்கள் நிலைமை மோசமாகும்.
இதையும் படிங்க: இந்திய குழந்தைகளை நாடு கடத்தும் டிரம்ப்... உச்சக்கட்ட அதிர்ச்சியில் பெற்றோர்!!
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையும்போது, அவர்கள் குறித்து ஆய்வு செய்தபின்புதான் அனுமதிக்கப்படும், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இடர்காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கடந்த ஜனவரி மாதம் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கடந்த 2023 அக்டோபரில் ட்ரம்ப் முன்மொழிந்தார். இந்த உத்தரவையடுத்து, காஸா, லிபியா, சோமாலியா, சிரியா, ஏமென் நாடுகளில் இருந்து வருவோருக்கு அமெரிக்காவில்நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, பல பாதுகாப்பு சோதனைகள் நடந்தன.
இந்நிலையில் இந்த நாடுகள் வரிசையில் தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானையும் சேர்க்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மக்கள் அமெரிக்காவில் நுழையத் தடை விதிக்கும் உத்தரவை அடுத்தவாரம் அதிபர் ட்ரம்ப் முறைப்படி அறிவிப்பார் எனத் தெரிகிறது.
அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களின் நிரந்தரக் குடியேற்றத்துக்கு தேவையான அனைத்து சோதனைகளையும் முடித்தால்கூட மற்ற நாட்டினரைவிட அதிகமான சோதனைகளுக்கு ஆளாகிறார்கள். இதில் சிறப்பு குடியேற்ற விசா வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மட்டும் இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
2021, ஆகஸ்ட் மாதம், அமெரிக்கா பாதுகாப்புப்படையினரை வாபஸ்பெற்றபின் காபூல் நகரை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அங்கு ஐஎஸ்எஸ் தீவிரவாதிகள் நடமாட்டமும் அதிகரித்தது. பாகிஸ்தான் மக்கள் கூட பாதுகாப்பில்லாத சூழலை எதிர்கொண்டனர்.
அமெரிக்காவில் குடியேறுவதற்காக விசா வேண்டி 2லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அகதிகள் அந்தஸ்து அல்லது சிறப்பு குடியேறிகள் விசா வழங்கப்பட வேண்டும். ஆனால், எதுவுமே வழங்காமல் அமெரிக்கா தாமதப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த சோதனையா..! அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்..!