காங்கிரசுக்கு 'அடுத்த அடி' : டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி ஆதரவு; தனித்து களம் காண்கிறார், மாயாவதி
டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் ஆதரவு அளித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து சரத் பவார் கட்சி விலகியதை தொடர்ந்து, இந்த முடிவு காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதற்கு இடையில், வழக்கம்போல் ஓட்டைப் பிரித்து பாஜக ஆதரவு நிலையை எடுத்து வரும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி டெல்லி தேர்தல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே டெல்லியில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன.
இதையும் படிங்க: "மீண்டும் கெஜ்ரிவால்..." : பிரசார பாடலை வெளியிட்டது, ஆம் ஆத்மி ; மும்முனைப் போட்டியால் சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்
தற்போதைய நிலையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
மாயாவதியின் முடிவு
இதனால் 4 முனை போட்டி என்பது போல் தோன்றினாலும், உண்மையில் இது மும்மனை போட்டியாகவே அமையும். டெல்லியில் தாங்கள் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த மாயாவதி தனது வழக்கமான பாணியில் தனித்து போட்டி என்று அறிவித்திருக்கிறார்.
பாஜகவை மறைமுகமாக ஆதரித்து வரும் அவர் தனித்துப் போட்டியிட்டு ஓட்டுகளை பிரிப்பதன் மூலம் பாஜகவுக்கு சாதகமான நிலையை எடுத்து இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
கெஜ்ரிவாலுக்கு
அகிலேஷ் ஆதரவு
அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்று வந்தது. தற்போது திடீர் திருப்பமாக டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் அகிலேஷ் யாதவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "அகிலேஷ் ஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எப்போதுமே எங்களுக்கு ஆதரவு தெரிவித்து எங்களோடு இணைந்து வந்திருக்கிறீர்கள். இதற்காக நானும், டெல்லி மக்களும் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று, அந்த கடிதத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியை அகிலேஷ் யாதவ் ஆதரிப்பது இது முதல் தடவை அல்ல. கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் மகிளா அதாலத் பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டார். பேரணியில் பேசிய அவர், "இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு டெல்லி மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணிக்கு எதிராக மிகப் பிரமாண்ட மான முறையில் 21 எதிர்க் கட்சிகள் அடங்கிய "இந்தியா கூட்டணி" அமைக்கப்பட்டது. ஆனால், தொடக்கத்திலிருந்தோ இந்த கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டு வந்தன.
தேர்தலுக்கு முன்பே பல கட்சிகள் பிரிந்து சென்று விட்டன. தேர்தலில் இந்தியா கூட்டணியின் தோல்வியை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு கட்சிகளாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து கழன்று வருகிறன்றன.
தேசிய கட்சி பாரம்பரிய தலைவரான சரத் பவார், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக முடிவு எடுத்து இருப்பதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்த மீளாத நிலையில், தற்போதைய சமாஜ்வாதி கட்சியின் முடிவு காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமாஜ்வாதி ஆதரவு ஏன்?
கெஜ்ரிவாலும் தொடக்கத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருந்தவர் தான். டெல்லி தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் கடுமையான போட்டி இருக்கும் என்று சமாஜ்வாதி கட்சி கருதுகிறது. இதன் காரணமாக பாஜக வெற்றியை தடுப்பதற்காகவே கெஜ்ரிவாலை அகிலேஷ் ஆதரித்து இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் பலன் இரண்டு கட்சிகளுக்குமே கிடைத்திருந்தன. உ.பியில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதி 62, காங்கிரஸ் 17 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒன்றில் போட்டியிட்டன. இதில், சமாஜ்வாதி 37, காங்கிரஸ் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!