வாய்க்கொழுப்பு....தீர்மானிக்கும் வாக்கு இல்லை...பிஹாரில் வெல்லாதவர்...மக்களை சந்திக்கணும்...விஜய் மீது நாதக, திமுக, காங்கிரஸ், பாஜக பாய்ச்சல்
விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்த விவகாரத்தில் விஜய் மீது முக்கிய அரசியல் கட்சிகள் விமர்சனத்தை வாரி இறைத்துள்ளன. பணக்கொழுப்பு, மக்களை சந்தியுங்கள், வாக்கு இல்லை, பீஹாரில் வெல்லாதவரை வைத்து வியூகமா? என விமர்சித்துள்ளனர்.
தமிழக அரசியல் களத்தில் இளம் கட்சியான தவெக ஆரம்பித்து ஓராண்டுக்குள் பெரும் எதிர்பார்ப்பையும், கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. விஜய் நேரடியாக செயலபடவில்லை என்கிற விமர்சனம் உள்ள நிலையில், அவரால் நியமிக்கப்பட்ட புஸ்ஸி ஆனந்தும், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியும் சரிவர செயல்படவில்லை என்கிற விமர்சனமும் உள்ளது.
ஜான் ஆரோக்கிய சாமியும் புஸ்ஸி ஆனந்தும் கைகோர்த்து செயல்படுகிறார்கள், கட்சிக்குள் யாரையும் விடவில்லை தங்கள் முடிவை மட்டுமே அமல்படுத்துகிறார்கள், கட்சிக்குள் யாரையும் விடாமல் செயல்படுவதும் கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான எந்த வேலையும் செய்யவில்லை என்றும் விமர்சனம் இருந்த நிலையில் பனையூர் அரசியல், வர்க் ஃபிரம் ஹோம் அரசியல் என பலரும் கிண்டல் அடித்து வந்தனர். இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இணைந்தார்.
இதையும் படிங்க: பண கொழுப்பு அதிகம்... விஜய்க்கு சீமான் சொன்ன குட்டிக்கதை... என் கூட்டணி இவர்களுடன் மட்டும்தான்..!
தவெகவை துடிப்புள்ள கட்சியாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதுவரை தவெக எந்தவித செயல்பாட்டிலும் இல்லை என்கிற விமர்சனத்தையும், கிண்டலையும் வைத்து வந்தவர்கள் நேற்று முதல் வேறு மாதிரி விமர்சனத்தை வைக்கிறார்கள். காரணம் ஆதவ் அர்ஜுனா மூலம் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விஜய்யுடன் ஆலோசனை நடத்தியதும், பின்னர் ஜான் உள்ளிட்டவருடன் ஆலோசனை நடத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை விஜய்க்கு கொடுத்ததாக தெரிகிறது.
இந்த ஆலோசனைகளை செயல்படுத்தினால் தவெக அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பு உண்டு. தவெகவின் தடைகள் தகறும் என்கிற நிலையில் பிரசாந்த் கிஷோரின் வரவை ஒட்டி பல்வேறு கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோர் ஒரு அறிக்கை வெளியிட்டதாகவும், பிரசாந்த் கிஷோர் விஜய் சந்தித்தபின் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்ததாகவும் பல்வேறு கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் உண்மை அல்ல என்பது பின்னர் தெரிய வந்தது. பிரசாந்த் கிஷோர் விஜய் சந்தித்தது தவெகவுக்குள் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. அரசியல் களத்தில் பலரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரசாந்த் கிஷோர் வரவு மூலம் தவெக பிரச்சினைகள் பெரும் அளவு சரி செய்யப்படும் என்பதால் மற்ற கட்சிகளும் சற்று பயத்தோடு இந்த சந்திப்பை பார்க்கின்றனர். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் வரவு பற்றி பல்வேறு கட்சிகள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து பேசும் பொழுது சிலருக்கு வாய் கொழுப்பு இருக்கும், அதுபோல் இவருக்கு பண கொழுப்பு இருக்கிறது. பணக் கொழுப்பை வைத்து அரசியல் செய்கிறார் அதை வைத்து எல்லாம் வெல்ல முடியாது. ஒரு கட்சிக்கு தேவை சொந்தமான சிந்தனை இருக்க வேண்டும். வெளியிலிருந்து வியூக வகுப்பாளர்களை வாடகை கொடுத்து வேலை செய்வதெல்லாம் சரியான செயல் அல்ல என்று தெரிவித்தது பிரச்சனையானது.
இதற்கு தவெக தரப்பில் ”சீமான் தேவை இல்லாமல் பேசுகிறார், ஜான் ஆரோக்கியசாமியை அவரே ஒரு காலத்தில் வியூக வகுப்பாளராக வைத்திருந்திருந்திருக்கிறார் ஆகவே அவர் இது குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை” என்று விமர்சனம் செய்தனர். அதேபோன்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பிரசாந்த் கிஷோர் வரவு குறித்து கேட்டபோது ”நீங்கள் வியூக வகுப்பாளரை சந்திப்பதை விட மக்களை சந்தித்தால் அதுவே பெரிய வியூகமாக இருக்கும். மக்களை சந்தியுங்கள் நடை பயணம் செல்லுங்கள், நேரடியாக மக்களுடன் இருக்கும் பொழுது உங்களுக்கு தானாக அரசியல் புரிபடும், அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது நடக்காது” என்று விமர்சித்தார்.
அதேபோன்று திமுக அமைச்சர் பெரியசாமி கூறுகையில் ”விஜய் தான் பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என நினைக்கிறார் அவருக்கு வெற்றி பெறும் அளவில் வாக்கு வங்கி இல்லை, எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. அது எம்ஜிஆர் காலத்திலோடு முடிந்து விட்டது” என்று விமர்சித்தார். அதேப்போன்று காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ”பிரசாந்த் கிஷோர் பெரிய வியூக வகுப்பாளர் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள், ஆனால் அவரது சொந்த மாநிலமான பீகாரிலேயே சொந்தமாக கட்சி நடத்தி படுதோல்வி சந்தித்தவர். தன் மாநிலத்திலேயே வெல்ல முடியாதவர் பிற மாநிலத்தில் வந்து வியூகம் வகுத்து விஜய்யை வெல்ல வைக்கப் போகிறாரா” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
மொத்தத்தில் பிரசாந்த் கிஷோர் வருகை தவெகவிற்கு பயன்படுகிறதோ இல்லையோ தவெகவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல நடக்கும் முயற்சிகள் பலரது அடிவயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது என்று கூறலாம்.
இதையும் படிங்க: மக்கள் பிரச்சனையை கையிலெடுங்க..! கட்சியை சரி செய்யுங்க.. விஜய்யிடம் சொன்ன பிகே.. என்ன நடந்தது பேச்சு வார்த்தையில்?