ஆஸ்கர் வென்ற இயக்குநரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்.. பாதிக்கப்பட்ட இயக்குநரே கைதான அவலம்..!
ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு அந்நாட்டு ராணுவம் ஹம்தான் பல்லாலை கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலஸ்தீன மேற்கு கரை பகுதியை 1967ல் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அங்கு இஸ்ரேலியர்களை குடியேற்றியும் வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியில் இருக்கும் மசாபர் யட்டாவில்Masafer Yatta, 1980 முதல் இஸ்ரேலின் ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வந்தனர். ராணுவத்தின் கட்டாயத்தால் இடமாறிச் செல்லும் ஒரு பாலஸ்தீனிய இளைஞன் குறித்த கதையை நோ அதர் லேண்ட் என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்தனர்.
ஆஸ்கர் விருதுக்கும் இந்த ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இம்மாத துவக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், நோ அதர் லேண்ட் படம் சிறந்த ஆவணப்படமாக அறிவிக்கப்பட்டு விருதும் வழங்கப்பட்டது. இந்த நோ அதர் லேண்ட்' படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.இந்த படத்தை மசாபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்... இன அழிப்பு தடுக்கப்படுமா?
இப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையின் சூஸ்யா வசித்து வருகிறார். நேற்று இவருடைய வீட்டை முகமூடி அணிந்த பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கினர். ஹம்தான் பல்லால் மீதும் தாக்குதல் நடைபெற்றது. அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. பாலஸ்தீன மேற்கு கரை பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவரும் இஸ்ரேலிய மக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என நோ அதர் லேண்ட் ஆவணப்படத்தின் மற்றொரு இணை இயக்குநர் யுவல் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.
எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர். என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற இஸ்ரேல் ராணுவம் ஹம்தான் பல்லாவை கைது செய்து அழைத்து சென்று விசாரித்து வருகிறது. இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்திய போதிலும், இஸ்ரேல் ராணுவம் இணை இயக்குநர் ஹம்தான் பல்லாவை கைது செய்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: களைக்கட்டிய ஆஸ்கர் விருது விழா... சாதனையாளர்கள் பட்டியல் இதோ!