சுறுசுறுப்பில்லாத சுற்றுலாத்துறை.. ஒதுக்கிய நிதியை பயன்படுத்தல.. நாடாளுமன்ற நிலைக்குழு வேதனை..!
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முழுமையாக செலவிடவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியைக் கூட மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முழுமையாக செலவிடவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு வேதனை தெரிவித்துள்ளது. இது மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாகக்குறைபாடு மட்டுமல்லாது, நாட்டின் சுற்றுலா வளர்ச்சியையும் சேர்த்து பாதிக்கும் என்று நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
2023-24ம் நிதியாண்டில் மத்திய சுற்றுலாத் துறைக்கு ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டது, இதில் ரூ.801.81 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது அதாவது 34 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது. 2024-25ம் ஆண்டில் ரூ.2,479.62 கோடியை ஒதுக்கீடு செய்தநிலையில் அதில் ரூ.396.82 கோடி மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி எங்கே..? மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம்..!
இந்த புள்ளிவிவரங்கள் மத்திய சுற்றுலாத்துறையில் உள்ள திறமையின்மையும், கட்டமைப்பில் இருக்கும் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது என்று போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தில் ஏராளமான நிர்வாக சிக்கல்கள், செயல் தாமதங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு சவால்கள் ஆகியவையே இந்த மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் என்று சுற்றுலாதுறை அமைச்சகம் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையில், “தமிழகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் வருகை, வெளிநாட்டு வெளிமாநில பயணிகள் வருகையை கண்காணிப்பதற்கான பகுப்பாய்வு முறை வைத்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதே போன்ற வெற்றிகரமான பகுப்பாய்வு முறையை மாதிரியாக வைத்து விரிவான ஒருங்கிணைந்த டிஜிட்டல் திட்ட மேலாண்மை அமைப்பை செயல்படுத்த வேண்டும” எனத் தெரிவித்துள்ளது.
இது தவிர, சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநிலங்களின் செயல்திறன், தேவையான ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பித்தல் மற்றும் ஒட்டுமொத்த நிதி பயன்பாட்டு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்த வேண்டும், அதற்கு தனியாக செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இவ்வாறு செய்தால் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும், வளங்களை சிறப்பாகப் பிரித்து, செயல்படும். அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியும், சலுகைகளும், முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடும், புதிய திட்டங்களும் செயல்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள்.. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..!