BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மாநாடு உதவும் - மோடி..!
பாங்காங்கில் நடைபெற்று வரும் BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்று வரும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். உறுப்பு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை இந்த மாநாடு முன்னெடுக்கும் என்பதை உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்பதன் சுருக்கமே BIMSTEC. இதில் இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 1997-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பில் முதலில் இந்தியா உட்பட வெறும் நான்கு நாடுகள் மட்டுமே இருந்தன. பின்னர் சீரான இடைவெளியில் மியான்மர், நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றன.
இதையும் படிங்க: தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரத் மாதா கி ஜே என முழக்கம்..!
BIMSTEC அமைப்பின் முதலாவது உச்சி மாநாடு 2004-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தாய்லாந்து நாட்டில் இந்த உச்சி மாநாடு கூடியுள்ளது. வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, எரிசக்தி, சுற்றுலா, தொழில்நுட்பம், மீன்வளம், வேளாண்மை, பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு, நாடுகளுக்கு இடையிலான குற்றச்செயல்கள், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, கலாச்சார ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் ஆகிய 14 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு BIMSTEC அமைப்பு செயல்படுகிறது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. அதன் பெரும்பான்மையான செலவீனங்களை இந்தியா தான் பொறுப்பேற்று நடத்துகிறது. சுழற்சி முறையில் BIMSTEC அமைப்பின் தற்போதைய செயலாளராக இந்தியாவின் மணி பாண்டே பொறுப்பு வகிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 2-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெறும் 6-வது உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதை இலக்காக கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், மக்களின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும் வகையில் BIMSTEC உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு அதிகரிக்க உறுதி பூண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதே அரசின் மூத்த ஆலோசகர் முகமது யூனுஸ், பூடான் பிரதமர் ட்சேரிங் டோப்கே, மியான்மர் பிரதமர் மின் அனுங், நேபாள பிரதமர் பிரசாத ஷர்மா ஒலி, இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே, தாய்லாந்து பிரதமர் படோங்தரன் ஷினவத்ரே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கி வரும் பூகம்பங்கள்..! இயற்கையின் எச்சரிக்கை மணியா? கதிகலங்கும் மக்கள்..!