முதல்வர் ஸ்டாலினின் நாடகம் கலைந்துவிட்டது... சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் கோபம்.!
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக முதல்வரின் நாடகம் கலைந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதி வழங்கும் விஷயத்தில் தெலங்கானா மாநில அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அம்மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது.
பிஹார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அம்மாநில அரசு தீர்மானித்திருக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி வெளியிட அம்மாநில உயர் நீதிமன்றம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை. அங்குள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதற்கான புள்ளிவிவரங்களையும் பகுப்பாய்ந்து இடஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தால் அதையும் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் என்பதே யதார்த்தம்
சமூகநீதியைக் காப்பதற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று தங்களை தாங்களே பாராட்டிக் கொள்ளும் தமிழக ஆட்சியாளர்களோ, இந்தப் பயணத்தில் இன்னும் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன்மூலம் முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது. தெலங்கானாவைப் போல தமிழகத்தில் 50 நாட்களில் ரூ.300 கோடியில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். எனவே, கணக்கெடுப்பு பணியை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்." என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!