×
 

போப் பிரான்சிஸ் மறைவு.. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல்..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயரைக்கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் இன்று காலமானார். நுரையீரல் தொற்று, நிமோனியா காரணமாக ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 38 நாட்கள் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார். மேலும் போப் ஆண்டவரின் விருப்பப்படி, வாடிகனில் உள்ள புனித மேரி ஆலயத்தில் அவரது உடல் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

இந்நிலையில் 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வழி நடத்திய போப் பிரான்சிஸின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போக் பிரான்சிஸ் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்;  துயரமான தருணத்தில் கத்தோலிக்க சமூகத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - இரக்கம், பணிவு, ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கமாக போப் எப்போதும் நினைவுகூரப்படுவார்; ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்  விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், கத்தோலிக்க திருச்சபையை நன்கு வழிநடத்தி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய நபரான போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஏழை மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன. இவ்வாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்..!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், போப் பிரான்சிஸின் திடீர் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது மறைவு கத்தோலிக்க உலகிற்கும் அதற்கு அப்பாலும் ஒரு பெரும் இழப்பாகும். அவர் அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்தின் உண்மையான ஊழியராக இருந்தார். போப் பிரான்சிஸின் அன்பு, பணிவு மற்றும் சேவை ஆகியவற்றின் மரபு உலகெங்கிலும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப்  பிரான்சிஸ் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்; போப் பிரான்சிஸின் மறைவு அமைதியை விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளப் பதிவில், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். போப் பிரான்சிஸின் ஆத்மா சாந்தி அடையட்டும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.பி சு.வெங்கடேசன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் போப் பிரான்சிஸின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: #BREAKING: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share