முதுகலை மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு....
முதுகலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் வசிப்பிட இடஒதுக்கீடு (Residence based Quota) சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 11,275 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும், 4,935 முதுகலை படிப்புக்கான இடங்களும் உள்ளன. இவை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இளநிலை படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பலன்பெறும் வகையில் 7.5சதவித இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. அதேபோன்று முதுகலை படிப்புகளில் வசிப்பிட இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மொத்தமுள்ள இடங்களில் 50 சதவிதம் மாநில அரசு ஒதுக்கீட்டிலும், 50 சதவிதம் மத்திய அரசு ஒதுக்கீட்டிலும். மாநில அரசு வசம் உள்ள 50 சதவித்தில் தான் இந்த வசிப்பிட இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் வசிப்பிட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், மத்திய அரசு வசம் உள்ள 50 சதவிதத்தைத் தாண்டி, மாநில அரசு வசம் உள்ள 50 சதவிதத்திலும் இனி பிறமாநில மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்கு இது வழிவகுக்கிறது. அதாவது மாநில அரசின் மொத்த பங்கான 2,500 இடங்களில் 1,200 இடங்கள் மத்திய அரசுக்கு கொடுக்க நேரிடும். அது நடைமுறைக்கு வந்தால், மருத்துவக் கல்லூரி கட்ட இடம் கொடுத்து, கட்டிடம் எழுப்பி, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி நிர்வகித்து வரும் மாநில அரசுக்கு வெறும் 25 சதவித இடங்களும் மத்திய அரசுக்கு 75 சதவித இடங்களும் என்றாகி விடும்.
இதையும் படிங்க: வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை ரத்து செய்வதே உண்மையான சமத்துவம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி
போதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள முதுகலை இடங்களில் சேர்க்கை கிடைத்து விடும். மாறாக, நம் மாநிலத்தில் பிறந்து படித்து முதுகலையில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு சொற்ப இடங்களே கிடைக்கக் கூடிய அபாயம் இதில் உள்ளது.
கிராமப்புறங்களில் மருத்துவ வேலை செய்யும் இளம் மருத்துவர்கள் மேற்படிப்புக்கு விண்ணபிக்கும்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தமிழக அரசின் கொள்கைகளில் ஒன்று. ஒருவேளை மத்திய அரசு இதனை ரத்து செய்துவிட்டால் அவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று சேவை செய்வது தடுக்கப்படும். பிறகு எப்படி மாநிலம் முழுமைக்கும் அரசால் மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை...