×
 

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு குறிவைத்த ஆர்எஸ்எஸ்..! ராகுல் காந்தி விமர்சனத்தால் பின்வாங்கியது..!

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு குறிவைத்த ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனத்தால் பின்வாங்கியது

கிறிஸ்தவ தேவாலயங்கள் சொத்துக்களுக்கும், வக்ஃபு வாரிய சொத்துக்களுக்கும் இடையே ஒப்பீடு செய்து கட்டுரை வெளியிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆங்கில பத்திரிகையான “ஆர்கனைசர்” காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கண்டனைதத் தொடர்ந்து அந்தக் கட்டுரையை நீக்கி பின்வாங்கியது.

“முஸ்லிம்களை குறிவைத்தபின் அடுத்ததாக பாஜக கிறிஸ்தவர்கள் பக்கம் திரும்பியுள்ளது” என மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கண்டனம் கட்டுரையை நீக்கும் அளவுக்கு செய்துள்ளது. நாட்டில் உள்ள வக்ஃபு சொத்துக்களை திறம்பட நிர்வகிக்கவும், ஒழுங்குபடுத்தவும் வக்ஃபு திருத்த மசோதாவை 2025 கொண்டுவந்த மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார். 

புதிய வக்ஃபு மசோதாவின்படி வக்ஃப் நிலங்களை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. பழங்குடியினர் மற்றும் தொல்பொருள் நிலங்கள் இனி வக்ஃபு நிலங்களின் கீழ் இருக்காது என்று மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கழுகாக நினைத்து காக்காவாகும் காங்கிரஸ்... பாஜக-வை வீழ்த்த மோடியின் பாதை... ராகுலின் புது ரூட்..!

வக்ஃபு (திருத்த) மசோதா மீதான விவாதத்தின் போது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இந்தச் சட்டத்தின் மூலம் வக்ஃப் சொத்துக்களை மத்திய அரசு குறிவைக்கிறது, அடுத்ததாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற சமூகங்களை நோக்கி கவனம் செலுத்துவார்கள் என்று குற்றம்சாட்டினர். ஆனால் வக்ஃபு திருத்த மசோதாவை கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆங்கில பத்திரிகையான “ஆர்கனைசர்” ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் “ இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் இருக்கிறது? கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கா அல்லது வக்ஃபு வாரியங்களுக்காக என்று தலைப்பிட்டு விவாதம் நடத்தியது. அதில் இந்தியாவில் வக்ஃபு வாரியங்களுக்கு இருக்கும் நிலங்களை, சொத்துக்களைவிட கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அரசு சாரா மிகப்பெரிய நில உரிமையாளர் என்று குறிப்பிட்டது.

இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும், கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் சொத்து மதிப்பு மட்டும் ரூ.20ஆயிரம் கோடி வரும். ரியல் எஸ்டேட்டைப் பொருத்தவரை தேவாலயங்கள் வக்ஃபு வாரியங்களைவிட முக்கியப் பங்காற்றுகின்றன.

நீண்ட காலமாக, வக்ஃபு வாரியங்கள்தான் இந்தியாவில் அதிகமாக நிலங்களை வைத்திருக்கும் நில உரிமையாளர் என்ற கருத்து நிலவியது. ஆனால், உண்மையில் அது இல்லை, புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் மிகப்பெரிய நில உரிமையாளர் கத்தோலிக்க தேவாலயங்கள்தான். இவர்கள்தான் மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளர்கள். நாடுமுழுவதும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு நிலம் பரந்துபட்டு இருக்கிறது” என தெரிவித்தது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைசர் வெளியிட்ட இந்த கட்டுரைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து, பாஜக முஸ்லிம்களை முடித்துவிட்டு, அடுத்த சிறுபான்மையினரைக் குறிவைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “வக்ஃபு மசோதா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால், எதிர்காலத்தில் மற்ற பிற சிறுபான்மையினரையும் பாஜக குறிவைக்கலாம். கிறிஸ்தவர்கள் பக்கம் கவனத்தைத் திருப்ப ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நீண்டகாலம் தேவைப்படாது, இந்த தாக்குதலில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே பாதுகாப்பு அரசியலமைப்புச் சட்டம்தான்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் “ ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைசர் பத்திரிகை வெளியிட்ட கட்டுரை மிகவும் கண்டிக்கத்தக்க, வருந்தத்தக்கது. வக்ஃபு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி அடுத்த குறி கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதுதான் இருக்கும் என்று எச்சரித்தனர். 

இந்தியாவில் உள்ள கத்தோலிக்க சமூகத்தினர் தரப்பில் 7 கோடி ஏக்கர் நிலம் இருப்பதாக தெளிவாக கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. அதாவது 17.29 கோடி ஏக்கர் நிலங்கள், ரூ.20ஆயிரம் கோடி மதிப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. வக்ஃபு மசோதா மூலம் வக்ஃபு சொத்துக்களை கட்டுப்படுத்திய பாஜக அடுத்ததாக கத்தோலிக்க சமூகத்தினரை குறிவைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆர்கனைசர் பத்திரிகையின் ஆசிரியர் பிரபுல் கேட்கர் கூறுகையில் “ எங்கள் பத்திரிகையில்வந்த கட்டுரை பழைய செய்தி.  வக்ஃப் மசோதா மீதான நிலைப்பாடு காரணமாக காங்கிரஸிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவதை அந்தக் கட்சியால் தடுக்க முடியவில்லை. வக்ஃபு மசோதாவுக்கு பிரியங்கா காந்தி வாக்களிக்காததால் முஸ்லிம்களின் கோபத்தை எதிர்கொண்டுள்ளதால், காங்கிரஸ் புதுவிதமாக பிரசாரம் செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடல்சார் சுரங்கத்திற்கான டெண்டர் விவகாரம்… மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்காந்தி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share