எல்லாமே நான் தான்.. அன்புமணி பதவி பறிப்பு விவகாரம்..! குடும்ப உறுப்பினர்களுடன் ராமதாஸ் ஆலோசனை..!
நானே தலைவர்..நானே நிறுவனர் என ராமதாஸ் அறிவித்த நிலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
தனது மகன் அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம் இல்லாத செயல் தலைவராக நியமித்து இனி நானே நிறுவனர்...நானே தலைவர் என அறிவித்தார் ராமதாஸ். திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமுதாயத்தைப் பிடித்த அறியாமை நோயை தீர்க்கும் மாமருந்து அரசியல் அதிகாரம் என்பதை உணர்ந்து, 1989ல் பா.ம.க.,வை துவக்கியதாகவும், தமிழகம் மட்டுமல்லாது, இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் கூறி இருந்தார்.
லட்சோப லட்சம் பாட்டாளி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதாகவும், பார்லிமென்ட் செல்ல ஆசைப்பட்டதில்லை என்றும் வரும், 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூறினார். அதன்படி, பா.ம.க., நிறுவனராகிய நான், இனி தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன் என்றும் பா.ம.க., தலைவராக இருக்கும் அன்புமணியை, கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சின்னய்யாவுக்கு சப்போர்ட்டா... திலக‘போமா’ ஆன திலகபாமா... முகத்தை திருப்பிக்கொண்ட பெரியய்யா!
ஏற்கெனவே, அன்புமணிக்கும் ராமதாசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் ராமதாஸின் இந்த முடிவு பாமகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்தார்.
90 சதவீதத்திற்கும் மேலான பாமக நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக நிற்கும் நிலையில், பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் உடன் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்டோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, நீண்ட நேரமாக காத்திருந்த பொருளாளர் திலகபாமாவை சந்திக்க ராமதாஸ் மறுத்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் திடீர் ஆலோசனை... வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்புகள்!