2 கப்பல்கள் பயங்கர மோதல்.. இரு நாட்களாக பற்றி எரியும் தீ.. ஊழியர் மாயம்..புதிய தகவல்கள்..!
நடுக்கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், தீப்பற்றி இரண்டு நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
பிரிட்டன் மற்றும் வடமேற்கு ஐரோப்பா இடையே வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே அவை மோதிக் கொண்டன.
ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்குள்ளானது. எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.
பிபிசி தகவல்களின்படி அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல் நங்கூரமிட்டிருந்த போது, போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சோலாங் எனப்படும் கன்டேய்னர் கப்பலால் மோதப்பட்டதாகத் தெரிகிறது. அமெரிக்க நிறுவனமான க்ரோவ்லி, ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலின் ஆபரேட்டர் மற்றும் இணை உரிமையாளர் ஆகும். ஃப்ளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த விபத்தில் தீ பற்றி எரிந்தது மற்றும் ஜெட் எரிபொருள் கப்பலில் இருந்து வெளியானது. கப்பலில் பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்தவர்கள் அதனை விட்டு வெளியேறினர். தற்போது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் கணக்கிடப்பட்டுள்ளனர்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிக பாசத்தால் நேர்ந்த சோகம்… பேரனுக்காக தாத்தா எடுத்த விபரீத முடிவு!!
இரு கப்பல்களில் இருந்த 36 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரிட்டன் போக்குவரத்து செயலாளரிடம் பேசிய பிறகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரஹாம் ஸ்டூவர்ட் தெரிவித்தார்.
இப்போது அனைவரும் கரைக்கு வந்துவிட்டனர். ஆனால் இதனால் ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.
கப்பலில் இருந்தவர்களைத் தேடும் பணி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஒருவரை காணவில்லை என்பதை எச்.எம். கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது. காணாமல் போனவர் சோலாங் கப்பலின் ஊழியர் ஆவார்.
ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்த ஜெட் எரிபொருள் அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமானது. அமெரிக்க அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 10 எண்ணெய் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். மோதல் சமயங்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லவும், தேசிய அவரச காலங்களில் எரிபொருட்கள் கொண்டு செல்லவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
டேங்கரில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும், பெரிய அளவில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதாகவும் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் காட்டுகின்றன.
விபத்து நடந்தது எப்படி?
இம்மாகுலேட் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பிபிசியிடம் கூறிய போது, சோலாங் கப்பல் சுமார் 16 நாட்ஸ் வேகத்தில் வந்து மோதியதாகவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் கைகளில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு உயிர் காக்கும் படகுகளில் ஏறி தப்பியதாகவும் கூறினார்.
சுற்றுச்சூழலில் இந்த மோதல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இம்மாகுலேட் கப்பலில் இருந்து ஜெட் எரிபொருள் கடலில் கலந்திருப்பதாகவும் ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கப்பல்கள் பற்றிய விவரங்களைக் கண்காணிக்கும் மேரைன் டிராஃபிக்கின் தரவுகளின்படி, ஸ்டெனா இம்மாகுலேட் 183 மீட்டர் நீளம் (600 அடி) கொண்ட அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பல் ஆகும். ஸ்டெனா இம்மாகுலேட் கிரேக்க துறைமுகமான அகியோய் தியோடோராய் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு, பிரிட்டனில் உள்ள ஹல்லுக்கு செல்ல இருந்தது.
மார்டைம் ஆப்டிமா வலைத்தளத்தின்படி, இந்தக் கப்பல் 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் அதன் எடை கிட்டத்தட்ட 50,000 டன்கள் ஆகும்.
சோலாங் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கன்டேய்னர் கப்பல் ஆகும். இது 2005 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, மேலும் 9,500 டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்று மரைன் ஆப்டிமா வலைத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சோலாங் கண்டேய்னர் கப்பல், ஸ்காட்லாந்து துறைமுகமான கிரேன்ஜ்மவுத் என்ற இடத்திலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாமிற்கு சென்றுக்கொண்டிருந்தது
மேரைன் டிராஃபிக்கின் தரவுகள், விபத்து நடந்தபோது ஒரு கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததையும், ஒன்று கிட்டத்தட்ட நிலையாக இருந்ததையும் தெளிவாகக் காண முடிந்தது.
இதையும் படிங்க: மாமியார் வீட்டிற்கு தீ வைத்த மருமகன்.. மதுபோதையில் அட்டூழியம்.. முழுவதுமாக எரிந்து தீக்கரையான வீடு..!