எதுக்கு இண்டியா கூட்டணியை உருவாக்குனீங்க.? காங்கிரஸையும் ஆம் ஆத்மியையும் போட்டு பொளக்கும் சிவசேனா (உத்தவ்).!
இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையிலான கூட்டணி பிளவால் டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற வழிவகுத்தது என்று சிவசேனா (உத்தவ்) கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பறிய பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் தனித்து போட்டியிட்டதால் பாஜகவின் வெற்றி சுலபமாகிவிட்டதாக அக்கூட்டணி தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் இண்டியா கூட்டணியில் உள்ள சிவசேனா (உத்தவ்) கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் டெல்லி தேர்தல் முடிவு பற்றி எழுதியுள்ளது. அதில், "டெல்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்கத்தான் போராடின, இது பிரதமர் மோடிக்குனம் உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தேர்தல் வெற்றியை எளிதாக்கியது. இது தொடர வேண்டுமென்றால், ஏன் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்? டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை எதிர்ப்பதற்குப் பதிலாக ஆம் ஆத்மியும் காங்கிரஸும் பரஸ்பரம் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டன.
எதிர்க்கட்சிகள் இடையே இதேபோன்ற பின்னடைவு கடந்த ஆண்டு மகாராஷ்டிரா தேர்தலிலும் ஏமாற்றத்தை அளித்தது. டெல்லி தேர்தல் முடிவுகளில் இருந்தும் எதிர்க்கட்சிகள் பாடம் கற்கத் தவறினால், அது மோடி மற்றும் அமித் ஷாவின் எதேச்சதிகார ஆட்சியை மேலும் வலுப்படுத்தும். கடந்த ஆண்டு ஹரியானாவிலும் இதுபோன்ற நிலைமைதான் ஏற்பட்டது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அங்கும் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சில சக்திகள் ராகுல் காந்தியின் தலைமையை வலிவற்றதாக மாற்ற விரும்புகின்றனவா என்கிற சந்தேகம் எழுகிறது.
இப்படித்தான் நடக்கப் போகிறது என்றால், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருங்கள். நீங்கள் (காங்கிரஸ்) டெல்லி தேர்தலில் இருந்து யாரும் பாடம் கற்கப் போவதில்லை எனில், சர்வாதிகாரம் அதிகாரம் பெறுவதற்கு உதவிய பெருமை உங்களுக்குக் கிடைக்கும். இந்த உன்னதமான பணிகளை செய்வதற்காக கங்கை நதியில் குளிக்க வேண்டிய அவசியமும் இல்லை." என்று சிவசேனா (உத்தவ்) கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக வெற்றிக்கு பின் உள்ள தேர்தல் அறிக்கை...தமிழக அரசியல் கட்சிகள் கற்க வேண்டிய பாடம்
இதையும் படிங்க: காங்கிரஸூம் ஆம் ஆத்மியும் ஒன்னா சேர்ந்திருந்தா இப்படி நடந்திருக்குமா..? டெல்லி தேர்தல் முடிவால் நொந்துபோன திருமாவளவன்.!