பார்வை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்ற தகுதியுள்ளவர்கள்: உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு
பார்வை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நீதிமன்றங்களில், நீதிமன்றப் பணிகளில் பணியாற்ற தகுதியுள்ளவர்கள், அவர்களின் இயலாமையை வைத்து புறக்கணிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பான தீர்ப்பை வழங்கியது.
மத்தியப் பிரதேச அரசு சமீபத்தில் ஒரு ஆணை பிறப்பித்தது. அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நீதிமன்ற பணிகள், சேவைகளில் பணியாற்றத் தடைவிதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பல பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டாகச் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பல மாநிலங்களிலும் இதுபோன்ற உத்தரவு நடைமுறையில் இருப்பதை அறிந்த உச்ச நீதிமன்றம் தாமாகமுன்வந்து இதை வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதிகல் ஜே.பி.பரிதிவாலா, நீதிபதி ஆர் மகாதேவன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.
அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட நீதிமன்றப் பணிகள், சேவைகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பணியாற்றத் தகுதியில்லை என்று மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்த ஆணை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நீதிமன்றப் பணிகளில் பொறுப்பை வழங்காமல் மறுப்பது என்பது, அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும். இயலாமை என்ற ஒன்றை அடிப்படையாக வைத்து ஒருவர் நீதிபதியாக மாறும் வாய்ப்பை பறிக்க முடியாது.
இதையும் படிங்க: மதராஸா மாணவர்கள் 25 ஆயிரம் பேர் தவிப்பு: உ.பி. , மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்த வழக்கை நாங்கள் முக்கியமாகப் பார்க்கிறோம். அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நீதித்துறையின் அடிப்படைத் தத்துவங்களை நாங்கள் தொட்டுள்ளோம். ஒருவரின் இயலாமையை வைத்து அவரை நீதிமன்றப் பணிகளில் புறக்கணிக்கவோ, வேறுபாடு காட்டவோ கூடாது. அனைவருக்குமான செயல்முறை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இயலாமையை காரணம் காட்டி எந்த தகுதியான நபரையும் புறக்கணிக்கவோ ஒதுக்கவோ கூடாது.
ஆதலால் மத்தியப் பிரதேச அரசின் நீதிமன்ற பணிகள் குறித்தவிதிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள், பார்வை மங்கியவர்கள் நீதிமன்ற பணிகள் வகிக்கத் தகுதியற்றவர்கள் என்ற விதியை நாங்கள் ரத்து செய்கிறோம். இந்த பணிகளில் நியமிக்கப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சட்டப்பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்ற விதியையும் ரத்து செய்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலத்திலும் இதேபோன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றப் பணிகளில் வகிக்கத் தடை இருப்பதையும் ரத்து செய்கிறோம். அவர்கள் நீதிமன்ற பணிக்கான தேர்வுகளில் பங்கேற்கலாம். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், இயலாமையை வைத்து எந்த தனிநபரையும் வேறுபாடுகாட்டி புறக்கணிக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மூளையில் இருந்த வக்கிரத்தை வாந்தியெடுத்துவிட்டாய்.. யூடியூபரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை..!