திமுக ஆட்சிக்கு 2026இல் நிரந்தரமாக முடிவு கட்டுவோம்.. சூளுரைத்த ஹெச்.ராஜா.!!
திமுகவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு 2026இல் நிரந்தரமாக முடிவு கட்டுவோம் என்று பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீட்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இது திமுகவின் நாடகம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,"1974ஆம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திற்கு ஆதரவாகவும் மீனவர்களின் உரிமைக்காகவும் கச்சத்தீவு இந்தியாவிடம்தான் இருக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்திராகாந்தி அம்மையார் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது அதற்கு இசைவு தெரிவித்து ஆதரவளித்தவர் அன்றைய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி.
அதே நேரத்தில் தமிழத்தின் நலனுக்காகவும், மீனவர்களின் உரிமைக்காகவும் கச்சத்தீவு இந்தியாவிடம்தான் இருக்க வேண்டுமென வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி. ஆனால், அன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தோடும், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்த காரணத்தால் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் கச்சத்தீவை பாதுகாப்பதற்கான பாரதிய ஜனதா கட்சியின் முயற்சி அப்போது வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மனம் குளிர வரவேற்கும் டாக்டர் ராமதாஸ்!!
1974இல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸூம் அதற்கு உடந்தையாக இருந்த திமுகவும்தான் காரணம்.
மத்தியில் 15 ஆண்டு காலம் கூட்டணி அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த போது கச்சத்தீவை மீட்க எந்தவிதமான முயற்சியையும் அப்போது எடுக்கவில்லை. 1974க்குப் பிறகு திமுக தமிழகத்தில் நான்கு முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. அப்போது அமைதியாக இருந்து விட்டு இப்போது திடீரென ஞானோதயம் பிறந்தது போல் கச்சத்தீவை மீட்க வேண்டும் என நாடகம் போடுவது அப்பட்டமான அரசியல் சூழ்ச்சியேயன்றி வேறொன்றுமில்லை.
திமுகவின் இடைவிடாத இமாலய ஊழல்கள் குறித்து தொடர்ச்சியாக செய்திகளும், ஆதாரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாளும் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதால் அதிலிருந்து மக்களின் பார்வையை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு மீட்பு தீர்மானம், வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் என திமுக தனது வழக்கமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அடுக்கு மொழியிலும், எதுகை மோனையாகவும் வசனம் பேசி மக்களை ஏமாற்ற இது ஒன்றும் 1967 காலகட்டமல்ல.
திமுகவின் துரோகங்களை தமிழக மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவோம். திமுகவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு 2026இல் நிரந்தரமாக முடிவு கட்டுவோம்." என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்..? ஓட்டுக்காக திமுகவின் கபட நாடகம்- சீமான் ஆவேசம்..!