கோயிலை நிர்வாகம் செய்வதிலும் சாதியா..? மனுஷனாடா நீங்க எல்லாம்..!
எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதி அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த மாரியம்மன், அங்காளம்மன் மற்றும் பொன் காளியம்மன் கோவில்களில் இருந்து, பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பொன் காளியம்மன் கோவில் தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள் என்றும், மற்ற கோவில்கள் வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்று கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கொரோனாவால் அதிக வட்டி... ரிசர்வ் வங்கிக்கு ஆர்டர் போட்ட சென்னை கோர்ட்!!
மேலும், அவர் தனது உத்தரவில், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் கோவிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சாதி என்பது மத பிரிவு அல்ல, சாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மத பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்... பிரிவனைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான பொதுக்கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமம் கோர முடியாது. கோவிலை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மதத்தால் பிளவுபட்டுள்ள சமூகம், சாதியின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பது அனைவரும் அறிந்ததே. இதற்காகத் தான் தமிழக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தால் எட்டாவது படித்த எந்த சாதியினரும் பயிற்சியில் சேர்ந்து அர்ச்சகர் ஆக முடியும். பயிற்சியின் போது, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தமிழ் இலக்கணம், தமிழக கோவில்கள் வரலாறு, அனைத்துக் கடவுளுக்குமான மந்திரங்கள்; ஆகம கோவில்களில் பூஜை, அலங்காரம், வீதி உலா ஆகியவை கற்றுத் தரப்படும்.
தமிழ்நாட்டின் பல கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பும், பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் பூசனை செய்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அதேசமயம், இந்த திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படாமல் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. மக்கள் மனத்தில் மாற்றம் வராமல் கோயில் கருவறைக்குள் உள்ள தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதே உண்மை.
இதையும் படிங்க: ரூ.1,100 கோடி வரி செலுத்த மின்சார வாரியத்திற்கு நோட்டீஸ்.. ஜிஎஸ்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறுத்தம்..!