“உன்ன எங்க போனாலும் விடமாட்டோம்” - சீமானை எச்சரித்த கு.ராமகிருஷ்ணன்!
தந்தை பெரியார் குறித்து கொச்சையான கருத்துக்களை கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை முற்றுகையிடுவதற்காக புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் குவிந்துள்ளனர்.
தந்தை பெரியார் குறித்து கொச்சையான கருத்துக்களை கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை முற்றுகையிடுவதற்காக புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் குவிந்துள்ளனர்.
பாலியல் இச்சை ஏற்பட்டால் அதனை தாய், மகளிடம் தீர்த்துக்கொள்ளக் கூறியவர் தந்தை பெரியார் என நேற்று கடலூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் எப்போது அப்படி பேசினார் என்பது குறித்து சீமான் ஆதாரங்களை தன்னிடம் காட்ட வேண்டும் என்றும், அதற்காக தானே இன்று அவரது இல்லத்திற்கு செல்ல உள்ளதாகவும் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை சரியாக 10 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சென்றனர். இதற்காக ஏற்கனவே சீமான் இல்லம் முன்பு குவிந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லும் படி அறிவுறுத்தினர். ஆனால் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் திரும்பிச் செல்ல மறுத்து, அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
இதையும் படிங்க: சீமான் ஒரு சங்கி... பொங்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்..
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “பெரியார் குறித்து அவதூறு கருத்து கூறும் சீமான் அதற்கான ஆதாரங்களை தரும் வரை எங்கும் நுழைய விடமாட்டோம். இப்போது சீமான் பாண்டிச்சேரியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பாண்டிச்சேரிக்கும் சென்று அவரிடம் ஆதாரத்தைக் கேட்க உள்ளோம்” என எச்சரித்திருந்தார்.
இதனிடையே, புதுச்சேரியில் சீமான் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியிலேயே அவரை முற்றுகையிடுவதற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் மற்றும் தபெகவினர் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி; தபெகவினரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!