அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..
அதானி நிறுவனம் பங்குச்சந்தையில் செய்த பல்வேறு தில்லுமுல்லுகளை வெளிக்கண்டு வந்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் நாதன் ஆன்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்ட செய்தி பங்குச்சந்தையில்தெரிவிக்கப்பட்டவுடன், அதன் எதிரொலியாக அதானி நிறுவனப் பங்குகள் மதிப்பு 9 சதவீதம் இன்று சந்தை தொடங்கியவுடன் உயர்ந்தது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் செய்த தில்லுமுல்லுகளை வெளியிட்டபின், அந்த நிறுவனத்தின் பங்குமதிப்புகள் அதளபாதாளத்துக்கு சென்றது. உலகக் கோடீஸ்வரர்களில் டாப்-5 இடங்களுக்கு முன்னேறிய அதானி, பரமபதம்போல் இந்த அறிக்கையால் கீழே சரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் அதானி நிறுவனம் வரிச்சலுகையுள்ள நாடுகளான கரீபியன் நாடுகள், மொரீசியஸ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் சட்டவிரோதப்பணப்பரிமாற்றம், வரிமோசடி உள்ளிட்ட குற்றங்களை அதானி நிறுவனம் செய்துள்ளது என்று வெளியிட்டது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனமான செபி 24 புகார்களில் 22 புகார்களை விசாரணை நடத்தியுள்ளது. மேலும், ஹிண்டன்பர்க், அதானி நிறுவனத்துக்கும் செபி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை அதன்விவரங்கள் வெளியாகவில்லை. அதுமட்டுமல்லாமல் செபி நிறுவனத் தலைவர் மாதவி பூரி புச் அதானி நிறுவனத்தில் தனியாக கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டியது.
கடந்த 2017ம் ஆண்டு ஹிண்டன்பர்க் நிறுவனத்தை நாதன் ஆன்டர்ஸன் தொடங்கிய நிலையில் 8 ஆண்டுகளில் நிறுவனத்தை மூடியுள்ளார். நாதன் ஆன்டர்ஸன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ எங்களின் சிந்தனைகள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டதையடுத்து, நாங்கள் ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுகிறோம். நாங்கள் கையாண்ட பணம், பங்குகள் தொடர்பான வழக்குகளை அந்தந்த பங்குவர்த்தக ஒழுங்குமுறை வாரியத்திடம் ஒப்படைத்துவிட்டோம். நாங்கள் நிறுவனத்தை மூடுவதற்கு குறிப்பிட்ட எந்த ஒரு காரணமும் இல்லை இந்த முடிவுக்கு பின் எனக்கு பெரிய உடல்ரீதியான சிக்கலும் இல்லை, தனிப்பட்ட மிரட்டல்கள், சிக்கலும் இல்லை.
இதையும் படிங்க: ‘இந்தியாவின் நட்பு வேண்டாமா..?’ அமெரிக்காவில் தொடங்கப்பட்ட வழக்கு... அதானிக்கு திடீர் திருப்பம்..!
வெற்றிகரமான வாழ்க்கை என்பது ஒரு கட்டத்தில் சுயநலமாக மாறிவிடும் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். தொடக்கத்தில் எனக்கு நான் சில விஷயங்களை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தேன். இறுதியாக எனக்குள் நான் ஒரு திருப்தியை, மனநிறைவை, வசதியை என் வாழ்க்கையில் முதல்முறையாக உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 40வயதான நாதன் ஆன்டர்ஸன் தனது ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து கடந்த 2023 ஜனவரி மாதம்வெளியிட்ட “ புல்லிங் தி லார்ஜஸ்ட் கான் இன் கார்ப்பரேட் ஹிஸ்டரி” என்ற அறிக்கை பங்குச்சந்தையை புரட்டிப்போட்டது. பங்குச்சந்தையில் பங்குகள் மதிப்பை திருத்தி 10 ஆண்டுகளாக ரூ.18 லட்சம் கோடிக்கு அதானி மோசடி செய்துள்ளார் என்று அறிக்கை வெளியிட்டது. உலகக் கோடீஸ்வரர்கள் படிகளில் 5வது இடத்துக்குள் இருந்த அதானியை 25க்கு கீழ் இழுத்துப்போட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை.
இது தவிர அமெரிக்காவின் டார்ஸி பிளாக், ஐகா என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் குறித்தும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு பங்குச்சந்தையை ஆட்டம்காண வைத்தது.
இந்த ஆய்வு நிறுவனத்தை ஆன்டர்ஸன் தொடங்கும் முன் அமெரிக்காவின் வால்ஸ் ஸ்ட்ரீட் பகுதியில் உளவு நிறுவனத்திலும், பங்குச்சந்தைக்கு உளவு தொடர்பான விவரங்களை பணியையும், மோசடிகளை வெளிக்கொணரும் பணிகளையும் செய்து வந்தார். இந்த பணிகள் மூலம் பல விருதுகளையும் ஆன்டர்ஸன் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: பெட்டி பெட்டியாய் வைத்தும் குட்டிப்பையன் வைத்த ஆப்பு... கென்யாவில் பொடியனை ஹீரோவாக்கிய அதானி..!