யார் இந்த ஸ்டீபன் மிரன்..? அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பின் சூத்திரதாரி பொருளாதார வல்லுநர்..?
ஸ்டீபன் மிரன் யார்..? அவரைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 3ம் தேதி அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பு உலக நாடுகளையும், உலகப் பொருளாதாரத்தையும் உலுக்கியுள்ளது. அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் ஆசியப் பங்குச்சந்தை, அமெரிக்க, ஐரோப்பிய, லண்டன் பங்குச்சந்தை ஆட்டம் கண்டுள்ளன.
சீனா மீது அடுக்கடுக்கான வரிவிதிப்பு, அந்நாடும் பதிலடியாக விதித்த வரி, இரு வல்லரசுகளுக்கு இடையே வரிப்போரை ஏற்படுத்தியுள்ளது. சீனா மீது உச்சக்கட்டமாக 145 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதையடுத்து, அதைக் குறைக்கும் நோக்கில் பரஸ்பர வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் செயல்படுத்தினார். அதன்படி அமெரிக்க பொருட்களுக்கு அதிகவரிவிதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கும் அமெரிக்காவும் அதிகவரிவிதிக்கும் கொள்கையை பின்பற்றியது.
இந்த வரிக்கொள்கையில் இருந்து பின்வாங்காத அதிபர் ட்ரம்ப், கடந்த 2 நாட்களுக்குமுன் நடைமுறைப்படுத்தினார். ஆனால் சர்வதேச காரணங்களுக்காக 90 நாட்கள் வரை வரிவிதிப்பை நிறுத்துவதாக அமெரிக்க அறிவித்துள்ளது. ஆனால், அதிபர் ட்ரம்ப்பின் இந்தவரிவிதிப்பு கொள்கைக்கு மூளையாக இருந்தது, அவரின் முக்கிய பொருளாதார ஆலோசகர் ஸ்டீபன் மிரன். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஸ்டீபன், உலக வர்த்தகத்தையே மாற்றி அமைக்கும் வரிவிதிப்பு திட்டத்தை உருவாக்கி அதிபர் ட்ரம்ப் கைகளில் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 145% வரிவிதிப்பில் சிக்கிய சீனா.. கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொக்கரிப்பு..!
அமெரிக்க அதிராக இருந்த ரீகன் நிர்வாகத்தில் சிறந்த அமெரிக்க பொருளாதார நிபுணராகவும், அதிபரின் தனிப்பட்ட பொருளாதார ஆலோசகராக இருந்த மார்ட்டின் ஃபெல்ட்ஸ்டீன் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி ஸ்டீபன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
அதிபர் ட்ரம்ப், தனது சக்தி வாய்ந்த பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பொருளாதார வல்லுநர் ஸ்டீபன் மிரனைச் சேர்த்தார். அந்த குழுவில் சேர்ந்தபின் விரைவாகவே அதிபர் ட்ரம்பின் நம்பிக்கையைப் பெற்று, பரஸ்பர வரிவிதிப்பு வர்த்தகக் கொள்கையை உருவாக்கிக் கொடுத்தார்.
இந்த அறிவிப்பை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டவின் சர்வதேச பங்குச்சந்தைகள் ஆடிப்போயுள்ளன, உலக பொருளாதாரத்திலும், சந்தையிலும் அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பு, புதிய வரிக்கொள்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் 2005ல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, பொருளாதாரம், தத்துவம், கணிதத்திலும் ஸ்டீபன் பட்டம் பெற்றுள்ளார். அதன்பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தை கடந்த 2010ம் ஆண்டு ஸ்டீபன் பெற்றார். அதிபர் ட்ரம்பின் பொருளாதார ஆலோசகராக சேரும்முன், ஹட்சன் பே கேபிடல் நிறுவனத்தில் மூத்த பொருளாதார ஆய்வாளராக ஸ்டீபன் இருந்தார். அதுமட்டுமல்லாமல் 2020 முதல் 2021 வரை அமெரிக்காவின் நிதித்துறையில் பொருளாதாரக் கொள்கை ஆலோசகராகவும் ஸ்டீபன் மிரன் பணியாற்றியுள்ளார்.
புதிய வரிக்கொள்கைக்கு விளக்கம்:
அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரிக்கொள்கை குறித்து பொருளாதார ஆலோசகர் ஸ்டீபன் மிரன் கூறுகையில் “வரிவிதிப்பு என்பது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவை. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களும், சில முதலீட்டாளர்களும் வரிவிதிப்பு எதிர்விளைவை ஏற்படுத்தும், பேரழிவு தரும் என்று தெரிவிக்கிறார்கள். அது தவறு.
வரிவிதிப்பு குறித்து பொருளாதார ஒருமித்த கருத்து வரவேண்டும் என்பது மிகவும் தவறானது. ஏனென்றால், சர்வதேச வர்த்தகத்தை தெரிந்த பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் அனைத்து மாதிரிகளும் வர்த்தகப் பற்றாக்குறை இல்லை என்று கருதுகிறார்கள். அல்லது வர்த்தகப் பற்றாகக்குறை குறுகிய காலம் நீடிக்கும் மற்றும் நாணய மாற்று மூலம் சரிசெய்யலாம், என்று கருதுகிறார்கள்.
நிலையான மாதிரிகளின்படி, வர்த்தகப் பற்றாக்குறை அமெரிக்க டாலரை, மற்ற நாடுகளின் கரன்சிக்கு எதிராகப் பலவீனப்படுத்தும், இது இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும்போது இறுதியில் வர்த்தகப் பற்றாக்குறையை குறையும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீனாவுக்கு 125% வரி.. போட்டுத் தாக்கிய டிரம்ப்..!