திருப்பூரை புரட்டிப்போட்ட மழை..! மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெய்த கனமழையின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்கின்றனர்.
வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்னும் 36 மணி நேரத்தில் வங்க கடலின் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடல் நடுவே பொக்கிஷம்..! புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் பெய்த இந்த மழையின் காரணமாக கோடை வெயில் தணிந்து இதமான சூழல் நிலவியது. இந்த நிலையில், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் மதுரை மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. தீக்கதிர் அருகே உள்ள காமராஜர் பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீரில் விளாங்குடியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற முதியவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார். மது போதையில் ஜெயக்குமார் தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி தப்பிக்கவே முடியாது..! தினசரி அரசு பஸ் டிரைவர்களுக்கு மதுபோதை பரிசோதனை..!