முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!
கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம் கட்டப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்றாலும், கட்சி தொண்டர்களுடன் கடந்த 9 ஆண்டுகளாகவே பழகி வருகிறேன். அவர்கள் சுயநலம் இல்லாமல், தேசம், தாய் நாடு, தாய்மொழி பற்று உடையவர்கள். பாஜக - அதிமுக கூட்டணி அமைந்துவிட்டதால், திமுகவின் வெற்றி உறுதி என்பது போல அவர்கள் தரப்பில் கூறிக்கொள்ளலாம். ஆனால், அதை தீர்மானிக்க வேண்டியது எஜமானர்களான வாக்காளர்கள்தான். பாஜகவுடன் சேர்ந்ததால்தான் கடந்த 1999இல் வெற்றி பெற்றது. அதை யாரும் மறந்துவிடக் கூடாது.
கூட்டணி அமைந்த பிறகு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம் கட்டப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேசவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். எனவேதான் மற்ற தலைவர்களை அழைக்கவில்லை. திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் கூறுவதைப் பற்றி கேட்கிறீர்கள். எதை வைத்து இப்படி அவர் கூறுகிறார்? ஒரு கட்சியின் பொறுப்பில் உள்ளவர் ஒரு விஷயத்தை சொன்னால், மக்கள் நம்பும் படி இருந்தால்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும். பொத்தாம் பொதுவாகக் கூறும் இந்தக் கருத்தைப் பொருட்படுத்த தேவையில்லை.
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக சேர்க்கப்படுமா என்பதையெல்லாம் பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் அதிமுக, திமுக, பாஜக உறுப்பினர்கள் ஒன்றாக பேசிக்கொள்வோம். ஆனாலும் அவர்கள் கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில்," நம்மைப் பார்த்து ‘பொருந்தா கூட்டணி’ என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்கள். ஆம், இது திமுகவுக்கு பொருந்தா கூட்டணிதான். ஏனென்றால், மக்களை சுரண்டி கொழுக்கும் முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியை இந்தக் கூட்டணிதான் வீட்டுக்கு அனுப்பப்போகிறது. தமிழக பெண்களின் மாண்பை கழுவில் ஏற்றிய கயவர்களை அமைச்சர்களாக கொண்ட கேடுகெட்ட ஆட்சியை இந்தக் கூட்டணிதான் வேரறுக்கப் போகிறது.
இதையும் படிங்க: FLASH: பாஜக கூட்டணியால் விரக்தி… அதிமுகவில் இருந்து விலகல்..? சொன்னதை செய்த ஜெயகுமார்..!
இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்க போகிறது. இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் கண்ணில் மரண பயம் தெரிகிறது போலும். பதற்றம் வேண்டாம் முதல்வரே. இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. அதுவரை ஆடுங்கள். ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது." என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!