அரியணை நோக்கி...கனிமொழி பிறந்த நாளில் வைரலாகும் படங்கள்
மறைந்த தலைவர் கருணாநிதியின் அரசியல் பெண் வாரிசு கனிமொழியின் பிறந்த நாள் இன்று. அவரது ஆதரவாளர்கள் முதல்வர் பதவி நோக்கி கனிமொழி என்று படங்களை போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
திமுகவில் அண்ணாவுக்கு பின் முதல்வரான கலைஞர் கருணாநிதி, அந்த இடத்திற்கு சாதாரணமாக வரவில்லை. பலரை ஓவர்டேக் செய்து நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளர், அவர்தான் அண்ணாவுக்கு அடுத்து முதல்வர் என்கிற நிலையில் தனது தனிப்பட்ட சாமர்த்தியத்தால் முதல்வர் பதவியை ஏற்றார் கருணாநிதி. ஆனாலும் நெடுஞ்செழியன் முரண்டு பிடிக்க பொதுச்செயலாளர் பதவியை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் நான் முதல்வராகவும் தலைவராகவும் இருக்கிறேன் என்று இடைக்கால ஏற்பாடாக தலைவர் பதவிக்கு வந்தார்.
சில ஆண்டுகளில் தலைவர் பதவி திமுகவில் பெரிய பதவி ஆனது. நெடுஞ்செழியன் வெளியேற்றத்துக்கு பின் அன்பழகன் பொதுச்செயலாளர் ஆனவுடன் கட்சியை தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கருணாநிதி தான் மறையும் வரை திமுக தலைவராக இருந்தார்.
இதையும் படிங்க: அரியவகை முகச்சிதைவு நோய் தான்யாவை நினைவிருக்கிறதா?.. மறக்காமல் வீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
கருணாநிதியின் வாரிசு மு.க.முத்துவை எதிர்பார்க்க அவர் சரிப்பட்டு வரவில்லை, அடுத்து ஸ்டாலினை 80 களில் முன்னிலைப்படுத்தினார். அப்போது அவரது மகள் கனிமொழிக்கு வயது 12. ஸ்டாலின் அரசியலில் வளர, மு.க.அழகிரியும் அரசியலுக்குள் நுழைந்தார். தொடர்ந்து கனிமொழி கல்லூரி படிப்பை முடித்து செய்தியாளராக இந்து குழுமத்தில் இணைந்தார். கருணாநிதியின் வாரிசாக நேரடி பத்திரிக்கையாளராக கனிமொழி விளங்கினார்.
பின்னர் ராஜ்யசபா எம்.பியும் ஆக்கப்பட்டார். கருணாநிதியின் அத்தனை குணங்களையும் புத்தி சாதுர்யத்தையும், பகுத்தறிவு கொள்கையையும் ஒருங்கே பெற்றவர் கனிமொழி. கலைஞர் டிவி பங்குதாரர் என்கிற ஒரே காரணத்துக்காக அவர் சிறை செல்ல நேர்ந்த அவலமும் அவரது வாழ்க்கையில் நடந்தது. சோதனைகளில் இருந்து மீண்ட கனிமொழிக்கு திமுகவில் எப்போதும் உரிய இடம் அளிக்கப்படவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு இருக்கிறதா தெரியாது, ஆனால் அவரது ஆதரவாளர்களுக்கு எப்போதும் உண்டு.
மாநில அரசியலுக்குள் கனிமொழி வந்துவிடக்கூடாது என்பதில் திமுக தலைமை கவனமாக கனிமொழியை டெல்லி நோக்கி தள்ளுவதாக ஒரு பேச்சு கட்சிக்குள் உண்டு. கருணாநிதியிடம் இருக்கும் முக்கிய குணம் மற்ற வாரிசுகளிடம் இல்லாத குணம் கனிமொழி அணுகுவதற்கு எளியவர், குறிப்பாக செய்தியாளர்களிடம் எளிமையாக பழகக்கூடியவர். நிறைந்த படிப்பாளி. பெண்ணியவாதி. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் விவகாரத்தில் அப்பா முதல்வராக இருந்தபோது அப்பாவிடம் பேசி உரியதை செய்து தந்தவர்.
இன்றும். கனிமொழியின் மீது மாற்றுக்கட்சியினர் மதிப்புடன் அணுக காரணம் வீண் அவதூறு, தனிப்பட்ட தாக்குதல் எதையும் யார்மீதும் வைக்காதவர் கனிமொழி என்கிற காரணமே.
கலைஞரின் மகளுக்கு உரிய இடம் வேண்டும், கட்சியை வழி நடத்த காதுகொடுத்து கேட்டு கனிவுடன் அணுகும் தலைவர் கனிமொழி என்கிற பேச்சு திமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் உண்டு. உரிய காலம் வரும் அக்கா உரிய இடத்துக்கு வருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தனது தந்தை வழியில் பொறுமையாக காத்திருக்கிறார் கனிமொழி என்கின்றனர். திமுகவில் இன்று தகுதிமிக்க தலைவர்களை வரிசைப்படுத்தினால் கனிமொழிக்கு உரிய இடம் உண்டு என்று சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதை யாரும் மறுக்கவும் முடியாது.
அவரது பிறந்த நாளையொட்டி எந்த வருடமும் இல்லாத அளவுக்கு அவரது படத்தை வைத்து வித விதமான மீம்ஸ்களை ஆதரவாளர்கள் போட்டு வருகின்றனர்.
அதில் ஜெயலலிதா படத்தையும் கனிமொழி படத்தையும் பாதிப்பாதி போட்டு முன்னர், பின்னர் என போடுகின்றனர்.
பெரியாரின் கைத்தடியுடன் கனிமொழி நிற்பது போன்று போட்டு 2026-ல் முதல்வர் பதவி நோக்கி என்று போடுகின்றனர். இது அவரது ஆதரவாளர்கள் விருப்பம், ஆனாலும் கனிமொழி கட்சிக்கு கட்டுப்பட்ட, தமையன் ஸ்டாலின் தலைமையை ஏற்ற முன்னணி கேடராக செயல்பட்டு வருகிறார். அவர் உரிய இடத்தை மென்மேலும் உரிய உயரத்தை தொட தொண்டர்களுடன் சேர்ந்து வாழ்த்துவோம்.
இதையும் படிங்க: இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!