இறக்குமதி கார்களுக்கு 25% வரி.. அதிபர் ட்ரம்ப் அதிரடி.. நேரடி தாக்குதல் என கனடா கன்டனம்..!
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு 25% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, கனடா நாட்டின் மீதான நேரடித் தாக்குதல் என கனடா பிரதமர் மார்க் கார்னே கண்டித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “அமெரிக்காவில் தயாரிக்கப்படாத, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து கார்களுக்கும் இந்த அரசு 25 சதவீதம் வரிவிதிக்கிறது. ஆனால், கார்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருந்தால் எந்த வரியும் விதிக்கப்படாது. இந்த நடைமுறை ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலாகும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சீனாவின் சட்டவிரோத போதைப்பொருள்… இந்தியா மீது பழிபோடும் டிரம்ப் நிர்வாகம்..!
இதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்படாத சிறிய கார்கள், டிரக்குகள், லோடு வேன்கல் ஆகியவற்றுக்கு இனிமேல் 25% வரிவிதிக்கப்படும். அமெரிக்க அதிபராக 2வது முறை அதிபர் ட்ரம்ப் வந்ததில் இருந்து அமெரி்க்காவை முன்னேற்றுவேன், முதலில் அமெரிக்கா என்ற கோஷத்தை முன்னெடுத்து வருகிறார்.
அதன்படி, கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரிவிதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அது மட்டுமல்லாமல் இந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களுக்கு 25% வரிவிதிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதிபர் ட்ரம்பின் இந்த திடீர் அறிவிப்பால் அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக் 2.0 சதவீதம் சரிந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்தன, போர்ட் நிறுவனத்தின் பங்குகள் 0.1 சதவீதம் உயர்ந்தன.
ஜப்பான், தென் கொரியா, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனியில் உள்ள கார் நிறுவனங்கள் தங்கள் நாட்டில் காரைத் தயாரிக்காமல் அமெரிக்காவில் காரைத் தயாரித்து விற்பனை செய்வதை அதிபர் ட்ரம்ப் ஊக்கப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்காவில் தயாராகும் கார்களில் 50 சதவீதம் அந்நாட்டிலேயே விற்பனையாகிறது, அதேசமயம் மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனியில் இருந்து அதிக அளவில் கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்க அதிபரின் இந்த திடீர் அறிவிப்பால் கார் தயாரிப்புக்கு மூலப்பொருட்களான அலுமினியம், ஸ்டீல் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கார்களின் விலையும் உயரக்கூடும் என்று ஆட்டமொபைல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனடா மீது நேரடி தாக்குதல்!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்புக்கு, கனடா பிரதமர் மார்க் கார்னே கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் கார்னே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளிநாட்டு கார்களுக்கு 25% வரிவிதிப்பேன் என்று கூறியுள்ளது, கனடா மீதான நேரடித்தாக்குதலாகும். இந்த வர்த்தகப் போர் அமெரிக்கமக்களை கடுமையாக பாதித்துள்ளது, அமெரிக்க நுகர்வோர்களின் நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவு குறைந்துவிட்டது.
இது மிகமோசமான நேரடித் தாக்குதல். எங்கள் நாட்டு தொழிலாளர்களை, நிறுவனங்களை, தேசத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். ட்ரம்பின் உத்தரவு குறித்த விரிவான அறிக்கை கிடைத்தவுடன் கனடா அரசு அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பையடுத்து, ஆட்டமொபைல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க கனடா பிரதமர் கார்னே, உடனடியாக 104 கோடி டாலர் நிதியை ஒதுக்கியுள்ளார். ஆட்டமொபைல் தொழிலில் நேரடியாக 1.25 லட்சம் மக்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டிரம்ப் செய்த மோசமான செயல்... தவிக்கும் பிள்ளைகள்!!