டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இயற்கை வளங்களும், பல்லுயிர்களும் நிறைந்த அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மதுரை மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மதுரை மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்க திட்டம்:
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க 2023ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து 2024ம் ஆண்டு டங்ஸ்டன் சுரங்க குத்தகைக்காக உரிமம் வழங்குவர்தற்கான ஏல அறிவிப்பு வெளியானது. 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிங்க் இந்துஸ்தான் நிறுவனம் ஏலத்தை வென்றது. ஆனால் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராட்டத்தில் இறங்கினர்.
தன்னெழுச்சி போராட்டம்:
இதனையடுத்து அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாடம் 9ம் தேதி சட்டப்பேரவையில் திமுக அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தான் பதவியில் இருக்கும் வரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய விடமாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
இனிடையே, அரிட்டாபட்டியில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 25க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த மக்களை திமுக அமைச்சர் மூர்த்தி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மத்திய அரசு அறிவிப்பு:
போராட்டக்குழுவினரிடையே உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விரைவில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் போராட்டக்குழுவைச் சேர்ந்த சில விவசாயிகளைத் தன்னுடன் டெல்லி அழைத்துச் சென்ற அண்ணாமலை, மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு விவசாயிகள் சிலர் டெல்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியைச் சந்தித்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். இதனையடுத்து நேற்றே நல்ல செய்தி வரும் என காத்திருந்த மேலூர் மக்கள் பட்டாசு மற்றும் இனிப்புடன் ஆவலாக காத்திருந்தனர். இதனிடையே ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது போல டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.