பீகார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா.? 'பீகார் பட்ஜெட்' விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் பதிலடி.!
மத்திய பட்ஜெட்டை பீகாருக்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
பட்ஜெட் 2025 தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தார். அதில், "அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் காலத்தால் அழிக்க முடியாத ஒரு சொற்றொடர்படி ‘‘மக்களின் அரசாங்கம், மக்களால், மக்களுக்கு’’ அளிக்கப்பட்ட பட்ஜெட் இது. மக்களின் குரலை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்ஜெட்டை தயாரித்தோம். தேர்தலை மனதில் வைத்துதான் இந்த பட்ஜெட்டை உருவாக்கியிருப்பதாக சொல்கிற கருத்துகளை நான் ஏற்கவில்லை.
பீகாருக்கு மட்டும்தான் தேர்தல் வருகிறதா? அசாம் மாநிலத்துக்கும்தான் தேர்தல் வருகிறது. அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் நாளந்தா ராஜ்கிர் கலாச்சார மையங்களைக் கொண்ட மாநிலம் பீகார். இவ்வளவு செழுமை இருந்தும் அந்த மாநிலத்தில் இதுவரை ஒரு நல்ல சர்வதேச விமான நிலையம் கிடையாது. இதற்கு நாமெல்லாம் பொறுப்பு இல்லையா? அந்த மக்களுக்கு இதை நாம் கொடுக்க வேண்டாமா? பீகார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பீகார் தொழிலாளர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் வேலை செய்ய திட்டங்களை வகுக்க வேண்டாமா?" என்று நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1இல் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு மோடி அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு , திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று பட்ஜெட்டில் தாராளம் காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் சட்டமன்ற தேர்தல்.. திமுகவை வீழ்த்த அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு.. ஏற்குமா கட்சிகள்.?
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் பீகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன. இது இந்திய நாடு முழுமைக்குமான பட்ஜெட்டா, பீகாருக்கான பட்ஜெட்டா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் பீகாருக்கு கிடைத்தது போல ஆந்திராவுக்கு ஏன் வாங்கல.. சந்திரபாபு நாயுடுவை வறுத்தெடுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி.!