தீராத தமிழக மீனவர் பிரச்சினை.. திமுக, காங்கிரஸே மூலக் காரணம்.. மறைமுகமாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974, 1976ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நேற்று வரை இலங்கை சிறைகளில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனவே, மொத்தம் 97 மீனவர்கள் அந்நாட்டு சிறையில் உள்ளனர். 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 3 பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.
தண்டனை அனுபவித்து வருபவர்களில் பலர் படகு உரிமையாளர்கள் அல்லது மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்தில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. 1974ஆம் ஆண்டில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போதுதான் இந்தப் பிரச்சினை தொடங்கியது.பின்னர் 1976இல் மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடைபெற்றது. அதனால்,1974 மற்றும் 1976ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் ஆகும்.
இந்திய மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம்." என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.தமிழகத்தில் 1974இல் திமுக ஆட்சியிலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் இருந்தது. இந்த ஆட்சிகளே மீனவர் பிரச்சினைக்குக் காரணம் என்று இக்கட்சிகளின் பெயரைக் குறிப்பிடாமல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எங்களை நாங்களே காப்பாத்திக்கிறோம்.. இலங்கை செல்லும் தமிழக மீனவர் குழு..!
இதையும் படிங்க: ரூ.150 கோடி ஊழலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. அப்போ ரூ.1000 கோடிக்கு..? பாஜகவுக்கு சீமான் நறுக் கேள்வி.!!