மத்திய அரசின் திட்டங்களை ஏற்க மாட்டீங்க.. காசு மட்டும் வேணுமா.? திமுக மீது மத்தியமைச்சர் எல்.முருகன் அட்டாக்.,!
பி.எம்.ஸ்ரீ உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு ஆதரவளிக்காது. ஆனால், நிதி மட்டும் வேண்டும் என கூறுவது எப்படி சரி என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். "மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட் ஆகும். இளைஞர்கள், விவசாயிகள், மகளிருக்கான பட்ஜெட் என்றும் சொல்ல 2047-ம் ஆண்டு நாடு வல்லரசாக இந்த பட்ஜெட் அடித்தளமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாடு அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்கள் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து சுமைகளையும் மக்கள் தலையில் வைத்தனர். ஆனால், போலி வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. இதைப் பற்றியெல்லாம் திமுகவினர் கவலைப்படுவதே இல்லை.
இதையும் படிங்க: அஞ்சு கட்சி அமாவாசை, பத்து ரூபாய் தியாகி... அமைச்சர் செந்தில் பாலாஜியை டேமேஜ் ஆக்கிய மாஜி அமைச்சர்.!
அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்தது திமுகவைச் சேர்ந்த நபர்தான் என்று கண்டுபிடித்தது பாஜகதான்.
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடக்கின்றன. திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவியையே வெட்டிக் கொலை செய்கின்றனர்.
திமுகவினருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி விட்டது" என்று எல். முருகன் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். "புதியக் கல்விக் கொள்கையில் ஆரம்பக்கல்வி அளவிலேயே தாய் மொழியான தமிழ்மொழிக்கும், முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆனால், தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டும்தான் கற்றுக் கொடுக்க வேண்டுமா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் எதில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது? பி.எம்.ஸ்ரீ உள்ளிட்ட திட்டங்களுக்கு மாநில அரசு ஆதரவளிக்காது. ஆனால், நிதி மட்டும் வேண்டும் என கூறுவது எப்படி சரி?. திமுகவினர் அரசியலுக்காக போலியாக வேடமிடுகின்றனர். திமுகவின் அரசியலுக்காக மாணவர்கள் பலியாக்கக் கூடாது. மேலும், விகடன் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று எல். முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர், வீட்டுப் பேரன், பேத்திகள் 3 மொழி படிப்பாங்க..!! ஏழை பிள்ளைகள் படிக்கக் கூடாதா.? தெறிக்க விட்ட அண்ணாமலை.!