தலைமையின்றி தள்ளாடும் பல்கலைக்கழகங்கள். கேள்விக்குறியாகும் மாணவர்கள்...
கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே...
என ஆதிகாலந்தொட்டு கல்விக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்த மண் நமது தமிழ்நிலம். அதனால் தான் நாட்டிலேயே உயர்கல்வி தரவரிசையில் முதல்இடத்தைப் பிடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அளவிலும், மாணவர் சேர்க்கை விகிதத்திலும், தேர்ச்சி விகிதாச்சாரத்திலும் தமிழ்நாட்டின் புள்ளி விவரங்கள் வியக்கத்தக்கவை.
உயர்கல்வி சிறப்பாக உள்ளதென்றால் பல்கலைக்கழங்களின் செயல்பாடுகளே காரணம். ஏனென்றால் அவைதான் மேற்படிப்புக்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குவதும், நடைமுறைப்படுத்துவதும் ஆகும். தமிழ்நாட்டில் தனியார் உள்ளிட்ட 64 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் (ஒருசில பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை) 20 பல்கலைக்கழங்கள் மிக முக்கியமானவை.
பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் துணைவேந்தர் ஆவார். அவர்தான் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவது, புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி தருவது, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க காரணமானவர். ஆனால் அந்த முக்கிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 5 பல்கலை.யில் கடந்த சில ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாகவே உள்ளது அதிர்ச்சியான வேதனையாகும்.
அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம், துணைவேந்தர் பதவியை நிரப்பும் விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் தான்.
அதாவது துணைவேந்தர் நியமனம் செய்ய ஒரு தேடல் குழு நியமிக்கப்பட வேண்டும். அந்த தேடல்குழுதான் இன்னார் தான் துணைவேந்தர் என கண்டறிந்து பரிந்துரை செய்யும். பின்னர் அவர் துணைவேந்தராக பொறுப்பேற்பார். இந்த தேடல் குழுவில் மொத்தம் மூன்று பேர் இருப்பார்கள். அதில் 2 பேர் மாநில அரசால் நியமிக்கப்பட, ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இப்போது 4-வது ஒருவரை அதாவது யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் ஒருவரை சேர்த்து மொத்தம் நான்காக ஆக்க வேண்டும் என்பது ஆளுநரின் வாதம். அப்படியெனில் 4பேரில் 2 பேரின் கருத்து ஒன்றாக இருக்கும்பட்சத்தில் தலைமையை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் வரும் என்பது மாநில அரசின் வாதம். இந்த நீயா?நானா? போட்டியால் தான் துணைவேந்தரை தெரிவு செய்ய முடியாமல் பல்கலைக்கழகங்கள் தலையில்லாத உடலாக தவித்து வருகின்றன.
கல்லூரியின் முதல்வர், பேராசியர், இயக்குநர் ஆகியோருக்கென வரையறை உள்ளது போல், துணைவேந்தர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதிலும் பல்வேறு விதிகள் உள்ளன. 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்திருக்க வேண்டும், 20 ஆண்டுகள் கல்லூரிகளில் பணியாற்றி இருக்க வேண்டும் என.. ஆனால் சில துணைவேந்தர் நியமனங்களில் இந்த கல்வி பின்புலம் பின்னுக்கு தள்ளப்பட்டு அரசியல் முதன்மைப்படுத்தப் படுவது வேதனை.
இதன் உட்கிடக்கை என்னவென்றால் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்துகிறது தமிழ்நாடு அரசு. ஒருவேளை துணைவேந்தர் மத்திய அரசுக்கு சாதகமானவர் என்றால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கக் கூடும் என்றும், மாநில அரசுக்கு சாதகமானவர் என்றால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் தான் இந்த பதவியை நிரப்புவதில் இவ்வளவு அரசியல் நிகழ்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்பதே நிதர்சனம். அதுமட்டுமல்ல துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டு இருந்தால், பாடங்கள் மட்டுமல்லாது கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பு என்பதையும் சேர்த்தே பார்த்திருப்பார். அவ்வாறு இருந்திருந்தால், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கூட தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: குக்கரில் காத்திருந்த எமன். பெண்ணுக்கு .சமையல் அறையில் நிகழ்ந்த துயரம்
இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை