×
 

இளையராஜாவுக்கு இசை ஞானியைவிட மெய் ஞானியே பொருத்தம்.. நேரில் சந்தித்து வியந்த திருமாவளவன்.!

இசையமைப்பாளர் இளையராஜா இசைஞானி என்பதைவிட மெய்ஞானி என்பதே பொருந்தும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா இயற்றியுள்ள சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளார். இந்தப் பெருமைமிகு தருணத்தில் இளையராஜாவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசை வழங்கினார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் இளையராஜாவை வாழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் இளையராஜாவை விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இதுபற்றி திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில், "இசைஞானியைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது. அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாகப் புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்.

"இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்" - என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது. அது-
தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல; தன்னை உணர்ந்துள்ள   மெய்ஞானத்தின் புலப்பாடு! அவர் இசைஞானி என்பதைவிட மெய்ஞானி என்பதே பொருந்தும்." என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருமாவளவனின் இந்தப் பதிவுக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா செய்த தரமான சம்பவம்... வீடு தேடி வந்த ஸ்டாலின்!!



இதேபோல் தமிழக காங்கிரஸ் செல்வபெருந்தகையும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் "இசைஞானி இளையராஜா ‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார். இது வருகிற 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது. நிகழ்ச்சி வெற்றி பெற குடும்பத்துடன் இசைஞானியின் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஒருதலையான கல்வி திணிப்பு.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share