மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்பு வாரிய மசோதா.. ஆதரவு - 128, எதிர்ப்பு - 95..!
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளது.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 95 வாக்குகளும் பதிவாகின. இரண்டு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த உடனே இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.
மத்தியில் பாரதிய ஜனதா பொறுப்பேற்ற பிறகு முக்கியமான கொள்கை முடிவுகளில் பல்வேறு மாற்றங்களை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மூன்றாவது ஆட்சி காலத்தில் தங்களுடைய வாழ்நாள் லட்சியம் என்று சொல்லக்கூடிய பல விஷயங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்து விடுவதில் முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான வக்பு சட்ட திருத்த மசோதா... விளக்கமளிக்கிறது மத்திய அரசு!!
ஒரே நாடு ஒரே தேர்தர், குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்றவை பாஜகவின் லட்சியங்களில் முக்கியமானவை. அதில் ஒன்றுதான் வக்பு வாரிய சட்டத்திருத்தம். இந்தியாவில் ராணுவம், ரயில்வேக்குபிறகு அதிக நிலங்களை சொத்துக்களாக வைத்திருக்கும் அமைப்பு வக்பு வாரியம். அதன் உரிமை பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் முத்தவல்லிகளிடம் உள்ளது. அவற்றை திருத்தி மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக மத்திய அரசின் வசம் கொண்டு செல்ல வகை செய்கிறது இந்த சட்டத்திருத்தம். அதுதான் இப்போது எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இருஅவைகளில் நிறைவேறி உள்ளது.
மக்களவையில் இந்த மசோதா நிறைவேறிய நிலையில் நேற்று காலை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஏறத்தாழ 12 மணிநேரம் இந்த மசோதா மீது அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, அரசியல் சாசனத்திற்கு எதிராக சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பாஜகவின் ஜே.பி.நட்டா, இஸ்லாமியர்களை காங்கிரஸ் அரசு இரண்டாம்தர குடிமக்களாக நடத்தியது என்றும் இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக தான் சமஉரிமை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவுக்க ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதன்மூலம் இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. இது உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கையெழுத்திட்ட உடன் இந்த மசோதா சட்டபூர்வமாக அமலுக்கு வரும்.
இதையும் படிங்க: உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்.. திமுகவின் கருப்பு பேட்ஜ் விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..!