1965 முதல் ஜனசங்கமாக இருந்துவந்தாலும் 1980-ல் அரசியல் கட்சியாக உருமாறி முதல் 30 ஆண்டுகள் அரசியல் பரமபதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அரசியல் சதுரங்கத்தின் ஆட்ட நாயகனாக இருந்து வருகிறது பாஜக. ஆயிரமாயிரம் விமர்சனங்களை நித்தம் நித்தம் எதிர்கொண்டாலும் அது மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வடஇந்தியா, வடகிழக்கு இந்தியா, குறிப்பிடத்தக்க அளவில் தென்னிந்தியா என தனது அரசியல் பதாகைகளை பறக்க விட்டபடி தனது விஜயத்தை நிகழ்த்தி வருகிறது பாஜக.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பாரதிய ஜனதாவில் ஈட்ட முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. இங்கு கடந்த 60 ஆண்டுகளாக திராவிட சித்தாந்தம் மிக வலுவாக வேரூன்றி இருப்பதும், இன்றளம் அது நீர்த்து போகாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு அதன் தத்துவார்த்த கருத்துகள் கடத்தப்படும் முதலாவது காரணம். 2-வதாக எடுத்துக் கொண்டால் தமிழக பாஜகவின் முகமாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு தலைவர் கூட இன்னும் அக்கட்சியில் உருவாகவில்லை என்பதே உண்மை. தங்கள் உயிர், உடமை அனைத்தையும் ஈந்து கட்சிக்காக உழைத்தவர்கள் இல்லையா? என்ற கேள்வி எழலாம். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க, ரசிக்கத்தக்க வகையிலான தலைவர்கள் இல்லை எனலாம்.
இதையும் படிங்க: ‘நானும் மனிதன் தான்: தவறு செய்திருக்கலாம்...’முதல் 'பாட்காஸ்ட்' உரையில் மனம் திறந்த பிரதமர் மோடி..!
பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைவர்களாக செயல்பட்ட காலத்தில் தான் தமிழக பாஜக என்றொரு கட்சி இருந்தது என்பதே தெரியவந்தது. அதன்பின்னர் பொறுப்பேற்ற தமிழசை சௌந்தரராஜன் மிக கடுமையான உழைப்பை செலுத்தினார் என்பதை மறுக்கமுடியாது. தனது உருவகேலிகளை புறந்தள்ளி களத்தில் இறங்கி அவர் அரசியல் செய்த விதம் தமிழக பாஜகவில் புது ரத்தத்தைப் பாய்ச்சியது. தேர்தல் களத்தில் வெற்றி தோல்வி என்பது எல்லா கட்சிகளுக்கும் இயல்பான ஒன்றே. அந்தவகையில் தேர்தல் அரசியல் பாதையில் தமிழசை சௌந்தரராஜன் சோடைபோனாலும், ஒரு பெண்ணாக இருந்து தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டு தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்தார்.

அதன்பிறகு பொறுப்பேற்ற எல்.முருகன் தேசிய தலைமைகளின் ஆதரவை பெற்றபோதிலும் அடிமட்ட அளவில் கட்சியில் தொய்ந்துபோய் பணியாற்றவில்லை என்பது அரசியல்நோக்கர்களின் கருத்து. வெறும் திமுக எதிர்ப்பு என்ற அளவில் அவர் செயல்பாடுகள் குறுகிவிட்டதும் ஒரு காரணம். அதன்பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட்டவர் தான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை.
2021-ம் ஆண்டு ஜுலை மாதம் 8-ந் தேதி தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட போது அக்கட்சியினரே முதலில் நம்பவில்லை எனலாம். ஆனால் தடாலடி பேச்சுக்கள், அதிரடியான நடவடிக்கைகள், யாரும் எதிர்பாராத வகையில் செயல்பாடுகள் என அண்ணாமலை தனக்கே உரித்தான வகையில் கட்சியையும், மக்கள் மனதையும் மெல்ல மெல்ல ஈர்த்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டபோது மூத்த தலைவர்களாக உள்ளவர், முக்கிய நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொருவருக்கு ஒரு செக் என அண்ணாமலை சொல்லி சொல்லி அடித்தார்.

அதேபோன்று அதிதீவிர திமுக எதிர்ப்பு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதும் பாஜகவின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என தனது எதிர்ப்பை பதிவு செய்தே வந்தார். ஒருகட்டத்தில் அதிமுகவிடன் துணிச்சலுடன் கூட்டணியை முறிக்கும் அளவுக்கு சென்றார். அதேசமயம் முன்னுக்குப்பின் முரணான கருத்துகள், உணர்ச்சி மிகுதியில் சொற்களை உதிர்த்து விடும் குணம் ஆகியவற்றால் பின்னடைவுகளையும் சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் போன்றவற்றில் அவர் மிகுந்த சிரத்தையும் பிரசாரம் மேற்கொண்டது டெல்லி தலைமையை திருப்தியடையச் செய்தது என்றே சொல்லலாம். தீவிர அரசியலில் இருந்த நிலையில், திடீரென உயர்கல்விக்காக 4 மாதம் லண்டன் சென்றதும், வந்தபின்னர் தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டதும் வியப்போ வியப்பு தான்.

இந்தசூழ்நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்பணிகள் தொடங்கி உள்ளன. வருகிற 20-ந் தேதி புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது. இதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வரும் 17-ந் தேதி சென்னை வரவுள்ளார். இதனிடையே தமிழக பாஜகவில் 40 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்தற்காக அண்ணாமலையை பாராட்டி பி.எல்.சந்தோஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
அகில இந்திய பாஜகவின் தென்னிந்திய பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருப்பவர் பி.எல்.சந்தோஷ். அண்ணாமலையை அடையாளம் காட்டியது சந்தோஷ் தான். அதேபோன்று தேஜஸ்வி சூர்யா, பிரதாப் சிம்ஹா போன்ற இளம் அரசியல் தலைவர்களை தேசிய அளவில் வளர்த்தெடுத்ததும் அவர்தான். சந்தோஷ் யாரை கை காட்டுகிறாரோ அவரே தென்மாநிலங்களில் பாஜகவின் தலைவர்களாக அமர்வார்கள் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
தமிழக பாஜகவின் புதிய தலைவர் பெயர் பட்டியலில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் 2-வது முறையாக அண்ணாமலையை சந்தோஷ் டிக் செய்வாரா? அதனையே தேசிய தலைமை வழிமொழியுமா என்பது வருகிற 20-ந் தேதி தெரிந்து விடும்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியை அழிக்கிறதா காங்கிரஸ்?