விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கள் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். “கள் என்பது மது வகை கிடையாது. அது உணவு. கள்ளை மது என்று நிருபித்தால் ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்து வாதிட்டார்கள். கள் விடுதலை போராட்டத்தில் தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி துணை நின்று போராடி வருகிறது. ரஷ்யாவில் வோட்கா போல தமிழனின் தேசிய பானம் கள். அதை பனஞ்சாறு, மூலிகைச்சாறு என்றும் சொல்லலாம். கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை?

தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுக்கு சாராய ஆலை உள்ளது. சட்டப்பேரவையில் மது விற்பனையை உயர்த்த நடவடிக்கை எனப் பேசுகிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
பொருளாதாரம் தெரியாதவர்களிடம் நாடு உள்ளது. எத்தனை புயல் வந்தாலும் பனை மரம் சாயாது. மண் அரிப்பை தடுக்க மரம் நடவேண்டும். கள் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி துனை நிற்கும்,” என்று சீமான் பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், “அதை விடுங்கள்” என பதில் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், “ஈரோடு இடைத்தேர்தல் களம் எங்களுக்கானது. நான் ஒருவன்தான் போட்டியிடுகிறேன். அப்படி இருந்தும் திமுக பல அமைச்சர்களை அனுப்பி, வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்? பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெரியாரை எதிர்ப்பது மதவாதத்துக்கு ஆதரவாக உள்ளது எனக் கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்துக்கு எதிரானவர்?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கேட்டது கரும்பு விவசாயி சின்னம்.. கிடைத்தது மைக் சின்னம்.. நாதக ஹேப்பி அண்ணாச்சி!