கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் ஹமாஸுக்கு ஒரு பேரழிவாக மாறி வருகின்றன. சமீபத்திய தாக்குதலில் ஒசாமா தபாஷ் என்ற ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் இன்று காலை இஸ்ரேல் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டார்.
இன்று காலை தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் கான் யூனிஸில் உள்ள அல்-பர்தவீலை குறிவைத்து நடத்தப்பட்டது, அங்கு அவர் தனது மனைவியுடன் இறந்ததாகக் கூறப்படுகிறது.

செவ்வாயன்று, இஸ்ரேல், காசா மீதான கடுமையான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது, ஜனவரி 19 முதல் நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் கைவிட்டதாகக் குற்றம் சாட்டியது. இந்தப் புதிய தாக்குதல், அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நீடித்த அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இதையும் படிங்க: ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக இந்திய மாணவர் கைது.. அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை ஒரு இராணுவ சக்தியாக ஒழிப்பதே போரின் முதன்மை நோக்கம் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அழுத்தத்தை அதிகரிப்பதே சமீபத்திய தாக்குதல்களின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் பல உயர்மட்ட ஹமாஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் ஹமாஸின் நடைமுறை அரசின் தலைவரான எசாம் அட்லிஸ், உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் மஹ்மூத் அபு வத்ஃபா ஆகியோரும் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை மட்டும் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் இறப்புகள் காசாவில் மனிதாபிமான நிலைமை குறித்து சர்வதேச கவலைகளை எழுப்பியுள்ளன.
1959 ஆம் ஆண்டு கான் யூனிஸில் பிறந்த சலா அல்-பர்தவீல், ஹமாஸின் மூத்த உறுப்பினராக இருந்தார். அவர் 2021-ல் இயக்கத்தின் பொலிட்பீரோவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காசாவில் உள்ள ஹமாஸின் பிராந்திய பொலிட்பீரோவின் ஒரு பகுதியாகவும் இருந்தார். 2006 ஆம் ஆண்டில், ஹமாஸின் மாற்றம் மற்றும் சீர்திருத்தப் பட்டியலில் வேட்பாளராக பர்தாவில் பாலஸ்தீன சட்டமன்றத்தில் ஒரு இடத்தை வென்றார். அவர் 1993-ல் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் தோல்வி: காசாவில் பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேல்- 130 பேர் பலி..!