மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்தவர் கருமுத்து சுந்தரம். வயது 56. மதுரையில் கல்வி நிறுவனங்கள், மில்களை உருவாக்கிய கருமுத்து தியாகராஜர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர்களுக்கு தென்மாவட்டங்களில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன. கருமுத்து சுந்தரம், திருமணம் செய்து கொள்ளாத நிலையில், தனியாக வசித்து வருகிறார். மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மரியராஜ் (வயது 70) என்பவர் அபகரிக்க திண்டுக்கல்லில் உள்ள கருமுத்து சுந்தரத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தார்.அது தன்னுடைய நிலம் எனக்கூறி ஆவணங்களுடன் ஐகோர்ட் மதுரை கிளையில், கருமுத்து சுந்தரம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது. தீர்ப்பு சுந்தரத்திற்கு சாதகமாக வரஇருப்பதை அறிந்த மரியராஜ், நண்பர்களுடன் கோர்ட் வளாகத்திலேயே கருமுத்து சுந்தரத்திற்கு மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுந்தரின் எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 14 ஆம் தேதியன்று பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுந்தருடன் அவரது கடை ஊழியர்கள் இருந்து உள்ளனர்.
அப்போது பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்வதாக கூறி சுந்தரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் இரவு வெகு நேரம் ஆகியும் சுந்தர் வீடு திரும்பாத நிலையில் சுந்தரை காணவில்லை எனவும், சிலர் காரில் கடத்திச் சென்றதாகவும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..? 5 நாட்களாகியும் மீட்க முடியாத அவலம்.. அச்சத்தில் குடும்பம்..!

இதனை அடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்ட சுந்தரை தேட தொடங்கினர். முன்னதாக கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு கேமரா, ஹார்டு டிஸ்க், மோடம் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றனர். காரைக்குடி அழைத்துச்சென்று, அங்கிருந்து மற்றொரு காரில் மயிலாடுதுறை அழைத்துச்சென்று ஜெனமேந்திரன் (வயது 38 )என்பவர் வீட்டில் தங்க வைத்தனர்.
பின் மறுநாள் வடமாநிலங்களுக்கு அழைத்துச்சென்றனர். தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா, நாக்பூர், ஆந்திரா, பெங்களூரு என கடத்தல்காரர்களை பின்தொடர்ந்தனர். இதற்கிடையே ஆள் கடத்தல் வழக்கில் மரியராஜ், அருள்செல்வன் (வயது 35), அருள் (வயது 42) விக்னேஷ் (வயது 24) முத்துகிருஷ்ணன் (வயது 42) ஜெனமேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதை அறிந்த கூட்டாளிகள் சிவகங்கை மாவட்டம் வேலங்குடி ராமச்சந்திரன் என்ற அழகு (வயது 42) மயிலாடுதுறை கிரிவாசன் (வயது 46) சுந்தரத்தை மதுரையில் இறக்கிவிட திட்டமிட்டு திரும்பினர். அவர்களை பின்தொடர்ந்து வந்த போலீசார் நேற்றுமுன்தினம் இரவு மதுரை ரிங் ரோட்டில் கருமுத்து சுந்தரத்தை மீட்டனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குற்றவாளிகள் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொழிலதிபரை பத்திரமாக மீட்ட காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான தனிப் படையினரை, காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் பாராட்டினார்.
இதையும் படிங்க: வக்கில்லாத கோமா அரசே! 3 பேர் இறப்புக்கு நீங்க மட்டும் தான் காரணம்.. கொதிப்பில் இபிஎஸ்