டிஐஜி வருண்குமார் சீமானுக்கு எதிராக தொடர்ந்த தனி நபர் வழக்கில் காவல்துறை அதிகாரத்தை நீதிமன்றத்தில் பாதுகாப்பு போர்வையில் பயன்படுத்துகிறார், சாதாரண மனுதாரராக அவரை நீதிமன்றம் நடத்தவேண்டும் என திருச்சி வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் மனு அளித்து போராட்டம் நடத்த உள்ளனர்.
திருச்சி எஸ்.பி ஆக இருந்த வருண் குமார் நாதகவினரை கைது செய்ததும், அவர்கள் ஆடியோ வெளியானதும் இந்த விவகாரத்தில் மோதல் வெளியானதும், வருண்குமார் குடும்பத்தை இழிவு படுத்தும் விதமாகவும், மிரட்டியும் ட்விட்டரில் பதிவிட்டதாக சில நிர்வாகிகள் மீது வருண் குமார் புகார் அளித்ததன் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து நேரடியாக வருண்குமாரும், நாதகவினரும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இதையடுத்து வருண்குமார், சீமான் உள்ளிட்டோர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆஜராக வந்த வருண்குமார் மனுதாரராக வராமல் போலீஸ் அதிகாரியாக நூற்றுக்கணக்கான போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தி நீதிமன்றத்தில் இடையூறு ஏற்படுத்துகிறார், அவரும் ஒரு மனுதாரர்தான், தனிநபராக வழக்கு போட்ட வருண்குமாரை தனி நபராக நீதிமன்றம் நடத்தவேண்டும், ஆனால் அவர் டிஐஜி பதவியின் அதிகாரத்தை நீதிமன்றத்தில் பயன்படுத்துகிறார், இதனால் மற்ற வழக்குகளுக்கு வருபவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படுகிறது என்று திருச்சி வழக்கறிஞர்கள் ஒரு விரிவான மனுவை குற்றவியல் நடுவரிடம் அளித்துள்ளனர். இது தவிர ஜன21 அன்று வருண்குமார் வரும்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீமானின் இமேஜை டேமேஜ் ஆக்கும் அந்த ஒற்றைப் போஸ்டர்... திணறடிக்கும் தி.க குரூப்..!

வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
1. ”திருச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் (SP) இந்நாள் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் (DIG) வருண் குமார் என்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பவர் மீது தனி அவதூறு புகார் (Private Deformation Case) ஒன்றினை தனிப்பட்ட முறையில் (Individual Capacity) குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்: 1-ல் தாக்கல் செய்துள்ளார்.
2. இவ்வழக்கிற்காக DIG வருண் குமார் நேற்று 07.01.2025 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக வந்த பொழுது DIG என்ற Official Capacity-ல் நீதிமன்ற பிரதான வாயில் முதல் குற்றவியல் நீதிமன்றம் வரை 100-ற்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
3. இதனால் வழக்கறிஞர்களை நீதிமன்றத்திற்குள் அனுமதிப்பதும், நீதிமன்ற வளாகத்திற்குள் ஒதுங்கி செல்ல வைப்பதுமாக அமளி துமளியாக்கி வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த சிரமத்தையும். கஷ்டத்தையும் ஏற்படுத்தினார்.
4. மேலும் அவர் வருகின்ற 21.01.2025 அன்று மீண்டும் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வருகை தரஉள்ளார். அந்த சமயமும் 100-ற்கும்மேற்பட்ட காவலர்களை நீதிமன்றத்திற்குள் நிறுத்தி வழக்கறிஞர்களையும், வழக்காடிகளையும் அச்சுறுத்தவும் பயமுறுத்தவும் உள்ளார். இதனால் வழக்கறிஞர்களின் பணி பாதிக்கப்படுவதுடன் வழக்காடிகள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் பெரிய இன்னல்கள் ஏற்பட உள்ளது.
5. மேற்படி DIG வருண் குமார் Individual Capacity-ல் வழக்கு தாக்கல் செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு வரும்பொழுதெல்லாம் Official Capacity-ல் 100-ற்கும் மேற்பட்ட காவலர்களை நீதிமன்றத்திற்குள் நிறுத்துவது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதோடு அல்லாமல் அவருடைய நேர்மையற்ற நடத்தைக்கு உதாரணமாகவும் உள்ளது.
6. மேலும் இவரை சுற்றி 30-ற்கும் மேற்பட்ட அதிரடி படை வீரர்களை குவித்து நீதிமன்றத்திற்குள் தனி ராஜாவாக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். தனிப்பட்ட முறையில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு அரசாங்க செலவில் காவலர்களை பணியமர்த்திக் கொள்வது கண்டிக்க தக்கது. மேலும் சாதாரண குடிமக்களின் வரிப்பணத்தில் இவருடைய தனிப்பட்ட வழக்கிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
7. மேலும் இவர் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட வழக்கிற்கு சாட்சியமளிக்க வரும்பொழுது இவர் தனது உயர் அதிகாரிகளிடம் விடுமுறை பெற்று வராமல் Official Capacity-ல் வந்து நீதிமன்றத்திற்கு சாட்சியமளித்து வருகின்றார் என்பது விசாரணைக்குட்பட்தாகும்.
8. மேற்படி DIG வருண் குமார் தனது முகாம் அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருப்பதுடன், அவருடைய முகாம் வளாகத்திற்குள் பேட்டியோ, செல்போனோ வைத்திருக்க அனுமதிப்பதில்லை. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க வரும்பொழுதெல்லாம் நீதிமன்றம் தனது சட்டை பாக்கெட்டில் உள்ளது போன்று நீதிமன்றத்திலேயே பேட்டி அளிப்பதும், செல்போனில் பேசுவதும் இவரது முகாம் அலுவலகத்திற்கு ஒரு நியாயம், நீதிமன்றத்திற்கு ஒரு நியாயம் என நடந்து கொள்வது பொதுமக்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
9. குடிமைப் பணி அதிகாரிகளுக்கான (IPS Officers) உள்ள நடத்தை விதிமுறைகளையெல்லாம் மீறி தன்னை கடவுளாளல் அனுப்பி வைக்கப்பட்ட புனித பிறவி போல நீதிமன்றத்திற்குள் நடந்துகொள்வது சாமானிய பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அருவெறுக்கத்தக்க செயல்களை நீதிமன்றத்திற்குள் செய்து வருகிறார்.
10. (07.01.2025) அன்றைய நீதிமன்றத்திற்குள்ள வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்வதற்கு அதனை சாட்சியமாக பயன்படுத்த வேண்டியுள்ளதால் அதனை பாதுகாத்து வைக்க வேண்டுகிறோம்.
11. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கமான வழக்காடிகள் காலை 10.30 மணிக்கு ஆஜராவதுபோல் இவரும் ஆஜராக வேண்டும். நீதிமன்றத்தில் அழைப்பு பணிகள் முடிந்தவுடன் after calling works வழக்காடிகளுக்கு வரிசை கிரமமாக வழக்குகளை ஒவ்வொன்றாக எடுத்து நடத்துவதுபோல் இவருடைய வழக்கினையும் மற்ற குடிமகன்களின் வழக்குபோல் நடத்த வேண்டும். அதுவரை இவர் நீதிமன்றத்திற்கு வெளியே நிற்க வேண்டும். இவருக்கென சிறப்பு சலுகைகள் வழங்கி நேரம் ஒதுக்கி அந்த நேரத்திற்கு அவரை வரவழைப்பது நீதித்துறையின் மீது மிகுந்த சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையையும் காண முடிகின்றது. இது நீதி வழங்கும் முறைக்கு எதிரானதாகும்.
12. எதிர்வரும் 21.01.2025 அன்று மீண்டும் சாட்சியம் அளிக்க வருகின்ற திருச்சி சரக காவல்துணை தலைவர் வருண் குமார் நீதிமன்றத்திற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து வழக்காடியாக இல்லாமல் அதிகாரத்துடன் நடந்துகொள்வதை கண்டித்து நீதிமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்”.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரியாரின் நன்மதிப்பை நொறுக்கிட கிரிமினல் உத்தி... அதிமுகவை அழித்திடும் பாசிச சக்திகள்... போட்டுத் தாக்கும் திருமா..!