உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் கிரிமினல் குற்ற வழக்கில் ஈடுபடும் அரசியல்வாதிகள் எம்பி, எம்.எல்.ஏக்கள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும். எனவே அப்படி பட்டவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோர் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், " குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அத்தகைய தகுதி நீக்கம் என்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது ஆகும். இந்த மனு சட்டத்தை மீண்டும் எழுத அல்லது நாடாளுமன்றத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் சட்டம் இயற்றுமாறு வழிநடத்த முயற்சிப்பது போன்று உள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சையை கிளப்பும் திமுக.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை சரமாரி அட்டாக்.!

இது நீதித்துறை மறுஆய்வின் எல்லைக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வாழ்நாள் தடை பொருத்தமானதா அல்லது இல்லையா? என்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு மட்டுமே உட்பட்டதாகும். அதேப்போன்று தண்டனைகளின் கால அளவைக் கட்டுப்படுத்துவது அதிகப்படியான கடுமையைத் தடுக்கும் என்றாலும், அதனை ஏற்க முடியாது. குறிப்பாக தகுதி நீக்கங்களுக்கு கால அவகாசம் நிர்ணயிப்பதில் இயல்பாகவே அரசியலமைப்பிற்கு விரோதமானது எதுவுமில்லை.
ஏனெனில் தண்டனைகள் பொதுவாக கால அளவு அல்லது தீவிரத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதில் மனுதாரர் எழுப்பிய பிரச்சினைகள் பரந்த அளவிலான விளைவுகளைக் கொண்டுள்ளன. அவை அனைத்தும் நாடாளுமன்றத்தின் சட்டமன்றக் கொள்கைக்குள் தெளிவாக வருகிறது. மேலும் நீதித்துறை மறுஆய்வின் வரையறைகள் இதுதொடர்பாக பொருத்தமான முறையில் மாற்றப்படும். இதில் சட்டமன்றத் தேர்வுகளை அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1)ன் படி, தகுதி நீக்கம் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் வரை தான் நீடிக்கும். மேலும் குற்றச்சாட்டுக்குள்ளான பிரிவுகளின் கீழ் செய்யப்படும் தகுதி நீக்கங்கள் நாடாளுமன்றக் கொள்கையின் அடிப்படையில் காலத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் மனுதாரரின் பிரச்சினையைப் பற்றிய புரிதலை மாற்றியமைத்து வாழ்நாள் தடையை விதிப்பது என்பது கண்டிப்பாக பொருத்தமானதாக இருக்காது.

நீதிமன்றங்கள் சட்ட விதிகளை அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று அறிவிக்க முடியும் என்றாலும், மனுதாரரின் மனு சட்டத்தின் 8வது பிரிவின் அனைத்து துணைப் பிரிவுகளிலும் ஆறு ஆண்டுகள் என்ற வார்த்தையை வாழ்நாள் முழுவதும் என்று மாற்ற முயல்வதால் அதனை ஏற்பது என்பது சாத்தியம் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கக் கூடாது”. இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவீங்களா..? முறியடிப்போம் என வைகோ ஆவேசம்.!