தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ள நிலையில் அந்த ரேசில் முன்னிலையில் உள்ளதாக கூறப்படும் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் நயினாரின் டெல்லி பயணம் அடுத்த தலைவர் இவர்தான் என்பதை உறுதி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 26 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் வேலைகளில் களமிறங்கியுள்ளது. திமுகவை ஆட்சியை விட்டு அனுப்பியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக மற்றும் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதனால் கூட்டணி கணக்குகளை டெல்லி பாஜக தொடங்கியுள்ளது. ஆனால் பாஜகவோ அதிமுக கூட்டணியை விரும்பும் நிலையில் எடப்பாடியை சமாதானம் செய்ய பலகட்ட பேச்சு வார்த்தைகளையும் நடத்தியது. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த அதிமுக அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமித்ஷா அவசர அழைப்பு.. டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்.. தலைவர் பதவி உறுதியா?
இந்நிலையில் அதிமுக கூட்டணியை சாத்தியப்படுத்துவதற்கு அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்கவும் பாஜக தலைமை தயாராகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்ட நிலையில் அண்ணாமலையை தூக்கிவிட்டு அதிமுகவுடன் இணக்கமாக போகக்கூடிய ஒருவரை தலைவர் ஆக்கலாம் என நினைப்பதாக சொல்லப்பட்டது. தற்போது அண்ணாமலையே தான் மாநில தலைவராக தொடர போவதில்லை என நேரடியாக ஹிண்ட் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில்தான் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கனவே மாநில தலைவர் ரேசில் நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன்
ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணிக்காக நயினார் நாகேந்திரனை தலைவராக்குவதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தென்மாவட்டங்களை குறிவைத்தே காய்நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில், வாக்குவங்கி அரசியலுக்காக முக்குளத்தூர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக்கலாம் என்று பாஜக தலைமையும் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார் போல் தனக்கே தலைவர் பதவி கிடைக்கும் என நயினார் நாகேந்திரனும் காலரை தூக்கிவிட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி விஜயம் செய்திருப்பதாகவும், அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக்க தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனுக்கு சான்ஸே இல்லை... பாஜகவின் பயங்கர திட்டம்... அடுத்த தமிழக தலைவர் இவரா..?