கோவையில் உள்ள ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பதுகாக்கும் விதமாக புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அரசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, "இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் ரூ.34,000 முதல் ரூ.84,000 வரை விலை கொண்டதாகும். இந்த இருசக்கர வாகனத்தை விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தலாம். 295 கிலோ வரை எடை கொண்ட பொருட்களை இந்த இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லலாம்.

அதே போல பேட்டரி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்கள் இந்த வாகனத்தில் உள்ளன. உலக அளவில் இந்தியாவில் அதிக அளவில் இருசக்கரவாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதே போல மின்சார இருசக்கர வாகனங்களும் இந்தியாவில் அதிகம் பேரால் வாங்கப்படும்.
இதையும் படிங்க: வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - ஒரே போடாய் போட்ட எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள்...!
மின்சார இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை பரந்த அளவில் பலரும் உபயோகிக்கும் போதுதான் சுற்றுச்சூழல் சீர்கேடு நேராமல் பசுமை நீடித்திருக்கும். செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் பேட்டரி போல ஒரு பேட்டரி என்பது இந்த மின்சார இருசக்கர வாகனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதன் பின்னர் சில மாதங்களில் அங்கிருந்து விண்ணுக்கு ராக்கெட்கள் ஏவமுடியும். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து புவிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், உடலில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே தான் அவர் 45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்," என்றார்
இதையும் படிங்க: புலி அடித்து இளைஞர் பலி.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் கிராம மக்கள்..