கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வி.வி.மினரல், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட், பீச் சேண்ட் மைனிங் உள்ளிட்ட நிறுவனங்கள் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அதை தடுக்கக் கோரி கடந்த 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து கடந்த 2016-ல் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தாதுமணல் எடுப்பதற்காக ஏழு நிறுவனங்களுக்கு, உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கு கொண்டு செல்வதற்கும் 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: இலங்கை துணை தூதரகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..
தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி மற்றும் சத்யபிரதா சாஹு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் அளித்த அறிக்கையில், மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதும், ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்டு இருந்த தாது மணல்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, தற்போது 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பில் தாது மணல் பாதுகாக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.
மத்திய அரசு தரப்பில், அணுசக்திக்கு தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதை பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது. மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கைகளையும் மத்திய அரசு வகுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்,எம்.ஜோதிராமன் அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வாதத்தின் போது நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி அரசு ஆவணங்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை ஐந்து விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் ராயல்டி தொகையை 5832 கோடி வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
உரிய உரிமைத் தொகையை வசூலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், தாது மணல் இருப்புகளை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்து மத்திய அரசு நிறுவனம் ஐஆர்ஏ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தாது மணல் கொள்ளை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.

கனிம வள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, ஸ்ரீநாத்ஸ்ரீதேவன் மற்றும் வைகுண்டராஜன் ஆகியோர் ஆஜராகி, தாது மணல்களுக்கான உரிய உரிமை தொகை அரசு செலுத்தப்பட்டுவிட்டது என்றும், தாது மணல்கள் தங்களுக்கு சொந்தமானதுதான் என்றும், நீதிமன்ற உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் அறிக்கையை ஏற்ககூடாது என்றும் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாதுமணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று பிறப்பித்த தீர்ப்பில், முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும், வழக்கு ஆவணங்களை 4 வாரங்களில் சிபிஐ யிடம் தமிழக ஒப்படைக்க வேண்டும், தேவையான புலன் விசாரணை குழுக்களை சிபிஐ அமைக்க வேண்டும், விசாரணையை சிபிஐ இயக்குனர் கண்காணிக்க வேண்டும், அதிகாரிகள் தொடர்பு, அரசியல் தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்களின் வணிக பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

அமலாக்க துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை விசாரணை நடத்த வேண்டும், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிக்ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடு தொடர்பாக அரசு நியமித்த குழுக்கள், நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அறிக்கைகள் செல்லும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 1.4 கோடி மெட்ரிக் டன் மணலை மத்திய அரசு நிறுவனமான Indian rare earth limited India விடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும், 5,832 கோடி ராயல்டி செலுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வி. சுரேஷ் அளித்த அறிக்கை உத்தரவு செல்லும் , அந்தத் தொகையை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்தும் விவகாரம்.. தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்..