தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அப்போது மேகதாது அணை விவகராம் குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தனர். காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்து பேச உரிமை கிடையாது. நம் எதிர்ப்பால் திட்ட அறிக்கையை காவிரி ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது என மத்திய வனத்துறை தெரிவித்து விட்டது.

தமிழ்நாடு அரசின் முழு சம்மததை பெற்றால் தான் மேகதாது அணை கட்ட முடியும். எந்தக் கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று ஆவேசமாக பேசினார். பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி உதயகுமார், தமிழ்நாட்டில் இருந்து நாள் தோறும் லாரிகள் மூலம் ஓசூர் வழியாக இயற்கை வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகவும், அவற்றை தடுக்க அரசு உரியை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், 'அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்து செல்லக்கூடாது என்று ஒருவர் வழக்கு போட்டார். அதில் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
இதையும் படிங்க: இந்த கர்நாடகா அடங்கவே அடங்காதா..? மீண்டும் எரியத் தொடங்கும் மேகதாது அணை விவகாரம்..!

எல்லையில் எல்லா சோதனையும் செய்த பிறகு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறது. சட்டத்திற்கு உட்பட்டு தான் அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கூறுவது தவறு. கனிமங்களுக்கான உரிமைத்தொகை, பசுமைத்தொகை ஆகியவற்றை செலுத்திய பின்பு தான் கனிமங்களை எடுத்துச் செல்ல முடியும்.
அரசின் அனுமதியோடு தான் அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது என்றார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கும் நிலையில், நதிநீர் பிரச்சனைகளுக்கு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனை என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், நீங்க முதல்வராக இருந்தபோது அண்டை மாநில முதல்வர்களுடன் விரோதிகளாக, சண்டை போடுபவர்களாக இருந்தனரா? பக்கத்து மாநில முதல்வர்களுடன் பேசுமாறு கூறுகின்றனர். பேசினால் அத்தனை விவகாரமும் கெட்டுப் போய்விடும். அதனால் தான் நீதிமன்றம் சென்றோம். ஏற்கனவே வி.பி.சிங் காலத்திலேயே பேசி பார்த்தோம். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. கர்நாடகாவில் நம் மாநிலத்தவர் பலர் வசிக்கின்றனர். நாம் ஒரு வேகத்தில் பேசி அவர்களுக்கு அங்கே எதுவும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.120 கோடியில் தூர்வாரும் பணிகள்.. தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் துரைமுருகன்..!