முன்னதாக தென்காசியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மருத்துவர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் இதுக்குறித்து ஆடியோ ஒன்றும் வெளியானது. அதில், இப்படியே போனால் என்ன சார் செய்யுறது. ஸ்ட்ரெஸ்ஸோடு வேலை பார்க்கிற மாதிரி இருக்கு. ஏன் பி.எம்.ஓ (BMO - Block Medical Officer) ஆனோம்னு இருக்கு சார். அமைச்சர் வருவதற்காக, கட்சி ரீதியாக நடத்தும் விழாவை கட்சி ரீதியாக நடத்திட்டுப் போயிடணும். அரசு சார்பில் ஏன் சார் மேடை போடணும். ஒவ்வொரு PHC-க்கும் (Primary Health Centre) முன்னாடி ரூ.5ஆயிரம் இருந்தது.
இப்போது ரூ.10 ஆயிரம் கலெக்ட் செய்ய சொல்றாங்க. புது மெடிக்கல் ஆபிசர்கிட்ட போய் என்ன சார் கலெக்ட் செய்ய முடியும். பி.டி.ஓ ஆபிஸில் கேட்டால், புதுசாகப் போஸ்டிங் போட்டிருக்காங்கல்ல. அதுக்கு கேளுங்கன்னு சொல்றாங்க. நாங்க என்ன சார் கேட்க முடியும். ஏற்கனவே இருக்கிறவங்க எல்லாம் 5 பைசா தரமாட்டாங்கே. டிரான்ஸ்ஃபருக்கெல்லாம் காசு வாங்கிறது இல்லையா, அதைச் சொல்லி கேளுங்க டாக்டர்னு சொன்னால் என்ன செய்றது. இது புதுக் கதையாக இருக்கு. ஏன் வேலை பார்க்கிறோம்னு போய், வி.ஹெச். என் கிட்ட எல்லாம் என்ன சார் கேட்க முடியும். சொல்லுங்க பார்ப்போம். எப்படித் தந்திருவாங்க.

சங்கம் அது இதுன்னு போயிடுவாங்க சார் வி.ஹெச்.என் எல்லாம். டி.டி வந்து கட்சிக்காரர் ஆகிட்டாரான்னு சந்தேகமாக இருக்கு. சுத்தமாக என்ன பண்றதுனே புரியவே இல்லை சார். அன்றைக்கு எல்லோரும் குலதெய்வம் கோயிலுக்கு எல்லாம் போவோம். எனக்கும் போக வேண்டியது இருக்கு. எங்க போகமுடியும் சொல்லுங்க பார்ப்போம். ஒரு பிளாக்கில் இருக்கிற 100 பேரை வரச்சொல்லுன்னு கட்டளைப் போட்டால் என்ன செய்யமுடியும்.
இது மினிஸ்டருக்குத் தெரியுமா, தெரியாது. டிபார்ட்மென்ட்டில் நல்லபெயர் வாங்க இப்படி பண்ணிட்டு இருக்காங்கலே சார். ஒன்னுமே சொல்றதுக்கு இல்லைங்க சார். எல்லோரும் கோயிலுக்குப் போறதுக்காக மாறி மாறி வந்து கேட்குறாங்க. வருஷம் பூரா, ஹெல்ப் பண்றோம். வருஷம் பூரா வேலை செய்றோம். குலதெய்வ கோயிலுக்குக் கூட போகவிடலைனா என்ன சார் செய்யமுடியும். மேடத்துக்கிட்ட சொன்னேன்.
அவங்களும் புலம்புறாங்க. ஒரு டீ, காபி வாங்கிக்கொடுக்கணும் என்றால் கூட வாங்கிக் கொடுத்திடலாம். சாப்பாடு வாங்கிக் கொடுக்கணும்னா கூட, வாங்கிக்கொடுத்திடலாம் சார். ஒரு ஆளுகிட்ட பத்தாயிரம் ரூபாய் ஹெல்த் மினிஸ்டர் வர்றப்ப வாங்கினால், முதலமைச்சர் வரும்போது ரூ.20ஆயிரம் வாங்குவாங்க சார்.
இதையும் படிங்க: அடுத்தது நாமளா இருந்திடக்கூடாது... பொன்முடியைப் பார்த்து புத்தி வந்த மா.சு... அரசு மருத்துவமனைக்கு சர்ப்ரைஸ் விசிட்!

நாம என்ன வருவாய்த்துறையா 10 பேர்கிட்ட காசுவாங்கிட்டு, இங்க வந்து கொடுக்க. உள்ளே இருக்கிற ஆரம்ப சுகாதார உதவியாளர் அம்மாவுக்கு ரூ.1000 கொடுக்கிறதுக்கே டி.டி.எஸ்ஸில் பணம் கிடையாது. ஒன்றும் சொல்றதுக்கு இல்லை சார். தென்காசி எதை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கு என்றே தெரியலைங்க சார். நாம் எல்லோரும்போய் டிடி கிட்ட போய் பேசுவோம்'' என மருத்துவர் ஒருவர் பேசியிருக்கிறார்.
இந்த ஆடியோ வைரல் ஆனதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மருத்துவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வாங்கவில்லை. அந்த ஆடியோவில் இரண்டு குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஒன்று விடுமுறை நாளில் வர சொல்வது மற்றொன்று விழா நடத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள் என்பதும் தான். தற்போது இங்கு நடக்கும் விழாவிற்கு கூட மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பு. அவர்கள் தான் இந்த விழாவை நடத்துகிறார்கள். அவருடன் மாவட்ட மருத்துவத்துறை உடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

இங்கு எந்த மருத்துவர்களிடமோ அல்லது செவிலியர்களிடமோ பணம் வாங்கமாட்டார்கள். அப்படி பணம் வாங்கி நிகழ்ச்சி நடத்துவதும் இல்லை. மற்றொன்று நான் இந்த துறைக்கு பொறுப்பேற்ற நாள் முதல் நிகழ்ச்சி நடத்தும் இடங்களில் சாப்பிட்டது கூட கிடையாது. எனக்கு சால்வை கூட வேண்டாம், மருத்துவர்கள் அவ்வாறு எந்த செலவும் செய்ய கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி தான் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஆடியோ வந்தவுடன் ஜேடி-யை அனுப்பி சம்பந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டேன். இந்த ஆடியோவில் பேசியது யார் குரல் என்று கேட்கப்பட்டது. ஆனால் யாரும் உண்மைசொல்ல முன்வரவில்லை. அங்குள்ள மருத்துவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா என கேட்கப்பட்டது. ஆனால் யாரும் அப்படி வசூல் செய்ததாக கூறவில்லை. அப்படி வசூல் செய்திருந்தால் என்னிடமே நேரில் வந்து சொல்லலாம். அப்படி சொன்னால் உடனே சம்பந்தபட்ட அதிகாரி மீது நவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை யாரும் உண்மையை சொல்ல முன்வராததால் அந்த குரல் யாருடையது என்பது குறித்து கண்டறிய அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் பேசியவரை கண்டறிந்து அவர்கள் மூலம் உண்மையை அறிந்து அப்படி பணம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்போ பொன்முடி; இப்போ துரைமுருகன்... தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் திமுக அமைச்சர்கள்!!