அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் தான் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் மற்றும் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.
உலகைப் படைத்துக் காக்கும் இறைவனான நாராயணர் தனது கிருஷ்ண அவதாரத்துக்கு அடுத்து கலியுகத்தில் எடுத்த அவதாரமே வைகுண்டர் அவதாரம். இது ஸ்ரீமன் நாராயணரின் 10-வது அவதாரம். இந்த அவதாரத்தில் நாராயணர் முப்பொருளுமான சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருபொருளாய் அவதரித்தார். வைகுண்டர் “நாராயண பண்டாரம்” என்றும், "அய்யா" என்றும், "சிவநாராயணர்" என்றும் பெருமையோடு அழைக்கப்படுகிறார்.

வைகுண்டராக அவதரித்த நாராயணர் திருச்செந்தூரில் கடலில் இருந்து கடற்கரைக்கு வந்து தருவைக்கரையில் பண்டாரமாக மனுச் சொருபம் எடுத்தார். நாராயண பண்டாரமாக மானிடர்களுக்கு காட்சி அளித்த மாயன் கந்தைக்காவி உடையும், கையதிலே மாத்திரைக் கோலும், கமுக்கூட்டிலே பிரம்பும், நெற்றியில் வெள்ளை நாமமும், உச்சியிலே கொண்டையிட்டு உத்திராட்ச மாலை சுத்தி, தலையில் தலைப்பாகையும் அணிந்து வைகுண்டர் என்ற பெயரோடு சுவாமி தோப்பை நோக்கி வந்தார்.
பின்பு ஆறு ஆண்டுகள் மக்களின் மேன்மைக்காகவும், கலியன்தனை அழிப்பதற்காகவும் சிவனை நோக்கி தவம் இருந்தார். அங்கே ஒரு பண்டாரம் போல் இருந்து கொண்டு பதினெட்டு சாதி மக்களையும் ஒருதலத்தில் வருத்தி, தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்த்தார். சந்ததியில்லாத பேர்க்கு சந்ததி கொடுத்தார். தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுத்தார். இப்படி பல பெருமைகளைப் பெற்ற ஐயா வைகுண்டரின் 193 அவதார தினம் இன்று.
ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலம் பாதிப்பு.. சென்னை அப்பலோவில் அனுமதி
இந்த நிலையில், அய்யா வைகுண்டர் அவதார தினத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள்!
"எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சிக் கூட்டம்... பாஜக ஏன் வரணும்.? விரிவாக விளக்கிய கனிமொழி.!