பாஜகவின் அடுத்த தேசிய தலைவராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்மாநிலங்களில் இந்தி திணிப்பு விவகாரம் விஸ்வரூபவம் எடுத்து வருகிறது. இதனால் தென்னகத்தைச் சேர்ந்த ஒருவரை தேசிய தலைவர் பதவியில் அமர வைக்கலாம் என பாஜக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேசிய தலைவராக பெண் ஒருவரை அமர வைக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிபட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனை தேசிய தலைவர் பதவியில் அமர வைக்கலாம் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் யார் என்ற கேள்விக்கு பல மாதங்களாக பதில் கிடைக்காமல் உள்ளது. அதற்கான பதில் இந்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் எனக்கூறப்படுகிறது. நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த கையோடு, தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் பாஜக தலைமை ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நாக்பூர் சென்ற பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்திடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: டிஜிட்டல் அந்தரங்கமும் தப்பாது.. வாட்ஸ்அப் மெசேஜைப் பயன்படுத்தி ரூ.200 கோடியை மீட்ட மத்திய அரசு..!

அடுத்த பாஜக தலைவருக்கான ரேஸில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. கடந்த 2019ம் ஆண்டு பாஜக செயல்தலைவராக பதவியேற்ற ஜே.பி.நட்டா, கடந்த 2020ம் ஆண்டு தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தல் காரணமாக 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால புதிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

கட்சி விதிகளின் படி உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்த பின்னர் தான், தேசிய தலைவருக்கான தேர்வு நடைபெறும் எனக்கூறப்படுகிறது. பொதுவாக ஆர்எஸ்எஸ் ஒப்புதலுக்குப் பிறகே தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அந்த வகையில் தலைவர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், கிஷன் ரெட்டி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என ஏகப்பட்ட போட்டிகள் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்ல பாப்கார்ன், இப்போ டோனட்.. ஜிஎஸ்டி வரி குறித்து காங்கிரஸ் கிண்டல்..!