காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் “ இதுபோன்று தொடர்ந்து மோகன் பாகவத் பேசினால், அவர் எங்கும் வெளியேறுவது சிரமமாகிவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து ஓர் ஆண்டு நிறைவடைந்தது. அது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறுகையில் “பல நூற்றாண்டுகளாக எதிரியின் தாக்குதலை (பரச்சக்கரம்) எதிர்கொண்ட பாரதத்தின் உண்மையான சுதந்திரம் என்பதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தேதிதான் தான் நாட்டின் உண்மையான சுதந்திரத்தை (பிரதிஷ்டா துவாதசி) குறிக்கிறது. இந்த நாளைத் தான் நாட்டின் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

மோகன் பாகவத்தின் இந்த பேச்சுக்கு அரசியல்வட்டாரத்தில் பெரிய எதிர்வினையை ஏற்படுத்தியது. சிவசேனா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மோகன் பாகவத் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் திறப்புவிழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசுகையில் “ ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சுதந்திரப் போராட்டம், அரசியலமைப்பு பற்றி தான் என்ன நினைக்கிறார் என்பதை ஒவ்வொரு 2-3 நாட்களுக்கு ஒருமுறை நாட்டுக்கு தெரிவிக்கும் துணிச்சல் இருக்கிறது.
தேசத்துரோகம் பற்றி அவர் நேற்று பேசினார். அரசியலமைப்புச் சட்டம் செல்லாது என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் செல்லாது என்றும் தெரிவித்தார். மோகன் பாகவத் வெளிப்படையாக வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று பேசியிருந்தால், அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்.
இதையும் படிங்க: உலகமே சுத்துறீங்க, மணிப்பூருக்கு போகமாட்டீங்க: பிரதமர் மோடியை விளாசிய ஜெய்ராம் ரமேஷ்

இதுபோன்ற நபர்கள் கிளி போன்று தொடர்ந்து பேசிக்கொண்டும், சுற்றுக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். நாம் இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதை நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிகழ்ச்சியில் பேசுகையில் “ சுதந்திரத்துக்காக எதையும் செய்யாதவர்கள், போராட்டத்தில் ஈடுபடாதவர்கள்தான் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களை பேசுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சை நானும் படித்தேன். ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நாள்தான் உண்மையான சுதந்திரதினம் என்று பேசியுள்ளார். ராமர் கோயிலை பிரதமர் மோடியுடன் சென்று தொடங்கிவைத்தார், 2014ம் ஆண்டு தான் பிரதமராக பதவி ஏற்றநாள்தான் தேசம் சுதந்திரம் அடைந்தநாள் என மோடி நினைக்கிறார். நாம் 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததை உணராமல், இதுபோன்று அவர் பேசுவது வெட்கக்கேடு. ஏனென்றால், தேச விடுதலைக்காக அவர்கள் போராடவில்லை, சிறை செல்லவில்லை, அதனால் அது அவர்களுக்கு நினைவில் இருக்காது. ஆனால், நம்முடைய மக்கள் சுதந்திரத்துக்காக சிறை சென்றார்கள், உயிர்தியாகம் செய்தார்கள், போராடினார்கள் அதனால்தான் நமக்கு நினைவிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தொடர்ந்து இதுபோன்று பேசினால் நாட்டுக்குள் எங்கு செல்வதும் அவருக்கு சிக்கலாகிவிடும் என்று எச்சரிக்கிறேன். வரலாற்றை மறந்தவர்கள் ஒருபோதும் வரலாறு படைக்க முடியாது. காங்கிரஸ் செய்த பணிகளை யார் மறக்கிறார்களோ, சுதந்திரத்துக்காக உழைத்ததை மறக்கிறார்களா அவர்களால் வரலாறு படைக்க முடியாது. இப்போது இதுபோன்ற கட்சிகள் தேசத்துக்காக உழைப்பதற்குப் பதிலாக காங்கிரஸ்கட்சியை அவதூறு செய்யவே முக்கியத்துவம் அளிக்கின்றன” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் காங்கிரஸ் - பாஜக ரகசிய கூட்டணி: அம்பலப்படுத்துகிறார், கெஜ்ரிவால்