"மென்சஸ்" நேரத்தில், புதுப் பெண்ணை குளிக்கக் கூட விடாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த கொடுமை: மாமியாருக்கு கடும் எச்சரிக்கையுடன், "டைவர்ஸ்" வழங்கிய குடும்ப நல நீதிமன்றம்
முன்பெல்லாம் அரிதிலும் அரிதான அபூர்வமான செய்திகள் எப்போதாவது ஒருமுறைதான் வருவது வழக்கம். கால மாற்றத்தில், அதுவும் இந்த அவசர யுகத்தில் ஒவ்வொரு நாளும் அது போன்ற வியப்பு அளிக்கும் செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. அதில் நமது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை என்று கருதலாம்.

ஆனால், வட மாநிலங்களில் இன்னும் அந்த பழமைவாத கொடுமைகள் தலைவிரித்து ஆடத்தான் செய்கின்றன. கணவனும் மனைவியும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் (மென்சஸ்) காலத்தில் யாரும் பழைய சம்பிரதாய சடங்குகளை எல்லாம் பார்ப்பதில்லை.
இதையும் படிங்க: மனைவியை பிரிந்து வாழும் ஒபாமா: விரைவில் விவாகரத்து? டிரம்ப் பதவியேற்பு விழாவிலும் மிச்செல்லி ஒபாமா 'ஆப்சென்ட்'
ஆனால் மத்திய பிரதேச மாநில தலைநகர் கோபால் அருகே உள்ள ஒரு நகரத்தில் கோவில் பூசாரி ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன தொடக்கத்திலிருந்தே புது மணமக்கள் கணவரின் பெற்றோருடன்தான் வசித்து வந்தனர். அந்த பூசாரியின் தாயார் மிகவும் பழமைவாதி.
பழைய சாஸ்திர சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அந்த மாமியார் மாதவிடாய் (மென்சஸ்) சமயத்தில் ஒரு வாரம் வரை மருமகளை குளிக்க கூட அனுமதி அளிக்காமல் மற்ற அறைகளுக்கும் செல்ல விடாமல், நாள் முழுவதும் ஒரே அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

மருமகள் எவ்வளவோ மன்றாடியும் அவருடைய கணவரோ அல்லது பெற்றோரோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. "இப்படி சம்பிரதாயமாக நடந்து கொள்ளாவிட்டால் புதுப்பெண்ணுக்கு பேய் பிடித்து விடும் என்றும் அவரை நாய் துரத்தும் என்றும் கூறி இந்த கொடுமையை அவர்கள் செய்து வந்திருக்கிறார்கள்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மருமகள் நான்கு மாதங்களுக்கு பிறகு பொங்கி எழுந்து விட்டார்.
போபால் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் இந்து திருமண சட்டத்தின் 13 (பி) பிரிவின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி புதுப்பெண் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் விரிவாக அந்தப் பெண் பட்டியலிட்டு இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி "இந்தக் காலத்திலும் இப்படியா !?"என அதிர்ச்சி அடைந்தார். "இதுபோன்ற காலாவதியான நம்பிக்கைகளை கொண்ட மக்கள் இன்னுமா இந்த உலகத்தில் இருக்கிறார்கள்!?" என்றும் தனது வியப்பை அவர் வெளிப்படுத்தினார்.
இது போன்ற செயல்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அவர் புதுப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய "கவுன்சிலிங் ஆலோசகர்" சப்னா பிரஜாபதி "இது போன்ற பிற்போக்குத் தனமான மூடநம்பிக்கைகள் நீடித்து வருவது" குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார்.
" பாரம்பரியத்தின் பெயரில் பெண்கள் இன்னும் இது போன்ற மனிதாபிமானம் இல்லாத வகையில் நடத்தும் செயல் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும்' அவர் கூறினார்.
சமீப காலமாகவே குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள், பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. இதில், ஏராளமான விவாகரத்து வழக்குகள் நீதி மன்றங்களுக்கு சென்றிருந்த நிலையில், அவைகளில் சில விவாகரத்து வழக்குகள் இணையத்திலும் வைரலாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றமும் துணை நின்று, அதற்கேற்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. அது போன்ற வழக்குகளில் ஒன்று தான் இந்த வித்தியாசமான வழக்கும்.
இதையும் படிங்க: இந்தியர்களின் கை -கால்களில் சங்கிலி மாட்டி அழைத்து வந்ததா அமெரிக்கா..? அம்பலமானது எதிர்கட்சிகளின் போலி புகைப்படங்கள்..!