மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென பூமி அதிர்ந்து, மசூதிகள் இடிந்து விழுந்தன. இந்த பேரழிவில் பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மார்ச் 28 அன்று மியான்மரைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மண்டலே, சாகிங் பகுதிகளை அதிகம் பாதித்தது.

இதை நேரில் கண்ட சாட்சிகள் அளித்த தகவல்களின்படி, ''நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்ததால் மசூதிகளின் கூரைகள் இடிந்து விழத் தொடங்கின. பல நமாஜிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தபோது, திடீரென நடுக்கம் ஏற்பட்டது. சிலர் ஓடிவிட்டனர். ஆனால், பலர் அங்கேயே இருந்தனர். மசூதியின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்'' என மண்டலேயில் வசிக்கும் ஒருவர் கூறினார்.
இதையும் படிங்க: மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது.. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கும் பரிதாபம்..!

இந்த நிலநடுக்கத்தில் மண்டலே, சாகிங்கில் உள்ள பல மசூதிகள் இடிந்து விழுந்தன மண்டலேயில் மிக மோசமான சேதம் ஏற்பட்டது. அங்கு 50க்கும் மேற்பட்ட மசூதிகள் சேதமடைந்தன. அதில், சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருந்தபோதும், அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பர்மா மனித உரிமைகள் வலையமைப்பின் மௌங் லா நா இதுகுறித்து கூறுகையில், ''சகாயிங்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்களும் இந்த துயரத்திற்கு பலியாகினர்.

மண்டலேயில் 75வது, 34வது, 35வது தெருக்களுக்கு இடையில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது கூரை இடிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, சகாய்ங்கில் உள்ள ஐந்து மசூதிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. அவற்றில் நான்கு மசூதிகள் தரைமட்டமானது. புனித ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்தது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் மசூதிகளில் தொழுகை நடத்த கூடி இருந்தனர்.

150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான, அரசின் கடுமையான கொள்கைகள் காரணமாக பழுதுபார்க்க அனுமதி வழங்கப்படாத பழைய மசூதிகளின் நிலை குறித்தும் இந்த நிலநடுக்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 144 பேர் இறந்ததாகவும், 732 பேர் காயமடைந்ததாகவும் மியான்மர் இராணுவ அரசின் தலைவரான மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: நடுநடுங்க வைத்த பூகம்பம்.. மியான்மரில் 650க்கும் மேற்பட்டோர் பலி.. நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா..!