சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு சென்றனர்.

அப்போது விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் கடந்த 9 மாதங்களாக விண்வெளியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான நடிவடிக்கைகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவர்களை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ-10 விண்கலம் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது.
இதையும் படிங்க: “திக்..திக்... பயணம்...” பாதி வழியில் பற்றி எரிய வாய்ப்பு... சுனிதாவின் விண்கலம் பத்திரமாக தரையிறங்குமா?

இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி திரும்புகிறது. நாசா அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கி விண்கலம் கிளம்பியது. பயணம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் தங்கள் பொருட்களுடன் இருக்கைகளில் தயாராகும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

அதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் உடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர். நாசா திட்டமிட்டிருந்தபடி, இந்திய நேரப்படி சரியாக காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது. விண்கலம் தற்போது பூமியை நோக்கிய சுமார் 17 மணி நேர பயணத்தில் உள்ளது. அதிகாலை 2:41 மணிக்கு டிராகன் காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகமாக நுழையும் என்றும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் அதிகாலை 3:27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் தரையிறங்குவர் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுனிதா, வில்மோர் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு புறப்படத் தயாராகினர்... எப்போது பூமிக்கு வந்து சேர்வர்..?